போலீஸ் லாக்கப்பில் மரணம் ஏற்படுவதைத் தவிர்க்க இருமுனை அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும், குலா

 

Detaineediesலோரி ஓட்டுநர் பி. சந்திரன் 2012 ஆம் ஆண்டில் போலீஸ் லாக்கப்பில் இறந்தது பற்றிய தமது 86 பக்க தீர்ப்பில் போலீசார் லாக்கப் சட்டம் 1953 ஐ பின்பற்றத் தவறிவிட்டதுதான் காரணம் என்று நீதிபதி எஸ். நந்தபாலன் கூறியுள்ளார்.

அச்சட்டப்படி லாக்கப்பில் அடைக்கப்பட்டிருப்பவரின் வியாதிக்கு, குறிப்பாக மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பவரின், சிகிட்சை அளிக்க வேண்டும் என்று நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்திரன் உடல்நலமின்றி இருக்கிறார், அவருக்கு வைத்தியம் தேவைப்படுகிறது என்பது போலீசாருக்கும் தெரியும் என்று நீதிபதி மேலும் கூறியுள்ளார்.

இது மிகவும் வருந்தத்தக்கது என்று கூறிய நீதிபதி, விசாரணை அதிகாரி விதிகளைப் பின்பற்றத் தவறியதால் நேர்ந்த இந்த உயிரிழப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கைப்படி 2000-2014 ஆண்டுகளுக்கிடையில் ஆண்டொன்றுக்கு சராசரி 17 லாக்கப் கைதிகள் இறந்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, நவீன, முதிர்ச்சியடைந்த அரசமைப்புச் சட்ட முறையிலான ஜனநாயகம் மலர்ந்துள்ள மலேசியாவைப் போன்ற நாட்டில் லாக்கப் மரணம் என்பதே இருக்கக்கூடாது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டதும் கட்டாயமானதாகும் என்று நீதிபதி மேலும் கூறியுள்ளார்.

இத்தீர்ப்பு பற்றி கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன், அரசாங்கம் லாக்கப் மரணத்தை வெறும் புள்ளிவிபரமாக எடுத்துக்கொண்டு அது அவ்வாறான மரணத்தை அனுமதிக்கும் சட்டவிதியாகிவிடக் கூடாது என்றார்.

kulaலாக்கப் மரணம் பற்றிய பிரச்சனையை கையாளுவதற்கு இரு முனை அணுகுமுறை தேவைப்படுகிறது: ஒன்று, போலீசாரின் மனோபாவத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும், இரண்டு, சுயேட்சை போலீஸ் புகார்கள் மற்றும் தவறான நிர்வாகம் ஆணையம் நடப்பிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றார் குலா.

கடந்த ஆண்டில், நாடாளுமன்றத்தில் தாம் கேட்டிருந்த கேள்விக்கு எழுத்து மூலமாக அளித்திருந்த பதிலில் கடந்த 16 ஆண்டுகளில் நாடுதழுவிய அளவில் போலீஸ் லாக்கப்பில் 269 மரணங்கள் ஏற்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சர் கூறியிருப்பதாக குலா தெரிவித்தார்.

இந்த மரணங்கள் போலீஸ் இலாகாவில் பெரும் பிரச்சனைகள் இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்று கூறிய குலா, இது களைப்பட வேண்டும் என்றார்.

மேலும், ஒவ்வொரு உயிரும் முக்கியமானது என்பதையும் கைதிகள் உயிர் வாழ்வதற்கான உரிமை மற்றவர்கள் உயிர் வாழ்வதற்குரிய உரிமைக்குச் சமமானது என்பதையும் அரசாங்கம் உணர வேண்டும் என்று குலா வலியுறுத்தினார்.