மலேசிய ஐஎஸ் போராளி சீரியாவில் கொல்லப்பட்டான்

isஇஸ்லாமிய   தீவிரவாத  இயக்கமான   ஐஎஸ்ஸில்   ஒரு  போராளியாக    இருந்த   மலேசியரான   சைனுரி   கமருடின்    சீரியாவில்  கொல்லப்பட்டான்.

இரண்டு    நாள்களுக்குமுன்  சீரியாவில்    கொல்லப்பட்ட    மூன்று  மலேசியர்களில்    தால்ஹா    என்ற  பெயரில்  பிரபலமாக   விளங்கிய   சைனுரியும்   ஒருவன்    என்பதை      புக்கிட்   அமான்   பயங்கரவாத   எதிர்ப்புப்   பிரிவுத்   துணை   இயக்குனர்   ஆயுப்   கான்   மைடின்  பிச்சை   உறுதிப்படுத்தினார்.

“எங்களுக்குக்  கிடைத்த   உளவுத்  தகவல்கள்    அதை     உறுதிப்படுத்துகின்றன”,  என்றாரவர்.

முன்னதாக,     சைனிரியும்   மேலும்   இருவரும்  குண்டுவெடிப்பு    ஒன்றில்   கொல்லப்பட்டதாக     மிங்குவான்   மலேசியா   அறிவித்திருந்தது.

சைனுரியின்   குடும்பத்தாரிடமிருந்து   செய்தியைக்   கேள்விப்பட்டதாக   அது   தெரிவித்திருந்தது.

“ஒரு   வாரத்துக்கு  முன்பு    சைனுரி    தொடர்பு   கொண்டு    பேசினார்.  அதுதான்   அவர்   கடைசியாக   பேசியது.  அப்போது,  ‘நான்  போக   வேண்டிய   நேரம்  வந்து   விட்டது’   என்று    அவர்   சொன்னார்”,   எனக்  குடும்ப     உறுப்பினர்    ஒருவர்    தெரிவித்ததாக   மிங்குவான்   மலேசியா    கூறியது.

சைனுரி    2014-இல்   ஐஎஸ்ஸில்    சேர்வதற்காக    மலேசியாவிலிருந்து    சீரியா    சென்றான்   எனத்    தெரிகிறது.

அங்கு   கதிபா   நுசந்தாரா   பிரிவுக்குத்   தலைமை    ஏற்றிருந்த     அவன்,    முன்பு  வெளியிடப்பட்ட    காணொளி  ஒன்றில்   மலேசியாவில்    ஐஎஸ்    தாக்குதல்    நடக்கும்   என்று    எச்சரித்திருந்தான்  என்பது   குறிப்பிடத்தக்கது.
சீரியாவில்    நிகழ்ந்த   குண்டு  வெடிப்பில்   கொல்லப்பட்ட   மற்ற    இருவரில்   ஒருவர்   52-வயது   சைனான்   ஹரித்,   இன்னொருவர்   அஹ்மட்   தர்மிமி   மாலிகி.