மகாதிர்: நான் தவறு செய்து விட்டேன், துணைப் பிரதமர் பதவி கேட்டது மசீச

Mrepliesடிஎபி துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று கேட்டிருந்தது என்று முன்னதாக கூறிக்கொண்ட மகாதிர், தான் அவ்வாறு கூறியது தவறு என்றும், மசீசதான் அப்பதவி வேண்டும் என்று கேட்டுக்கொண்டது என்றும் கூறுகிறார்.

டிஎபி துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று தாம் கூறியதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக் காட்டிய மகாதிர், “நான் எனது தவறைத் திருத்திக்கொள்கிறேன். அது டிஎபி அல்ல, அது மசீச” என்று அவர் தமது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அக்கோரிக்கையை விடுத்தவர் மசீசவின் துணைத் தலைமைச் செயலாளர் லோக் யுயென் யோவ். அவர் 2009 ஆண்டில் துணை அமைச்சராக பிரதமர்துறையில் இருந்தார் என்று மகாதிர் விளக்கம் அளித்தார்.

துணை அமைச்சர் லோக் பிரதமர் நஜிப்புக்கு விடுத்திருந்த அக்கோரிக்கை மலேசிய தகவல் இலாகாவின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

பகசா மலேசியாவில் எழுதப்பட்டுள்ள அந்த அறிக்கை கூறுகிறது: “டத்தோ லோக் யுயென் யோவ், மசீச துணைத் தலைமைச் செயலாளர், அவரது வலைத்தளத்தில் ஒரு துணைப் பிரதமர் மற்றும் ஒரு துணை பிஎன் தலைவர் ஆகிய பதவிகளை அவரது (மசீச) தலைவருக்காக உருவாக்கி “உண்மையான அதிகாரப் பகிர்வை” பிரதிபளிக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப்பை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்”,

நேற்று, மகாதிரை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டிருந்த செய்தி டிஎபி பிரதமர் பதவியைக் கோரவில்லை. ஆனால், இரண்டாவது துணைப் பிரதமர் பதவியைக் கேட்டது என்று கூறியது.