சீனப் புத்தாண்டின்போதுதான் விசாரணையா? போலீஸ்மீது குவான் எங் சீற்றம்

cmபோலீசார்,  பிஎன்  உறுப்புக்  கட்சிகள்   பிஎன்னிலிருந்து   விலக   வேண்டும்    என்று      நவம்பர்   23-இல்   அறிக்கை  விட்டதற்காக  பினாங்கு   முதல்வர்   லிம்  குவான்   எங்கை   விசாரணை   செய்ய  விரும்புகிறார்கள்.

ஷியாரியா   நீதிமன்ற(குற்றவியல்  நீதி)ச்  சட்டத்துக்கு   பாஸ்   முன்மொழிந்த   திருத்தங்கள்மீது   பிஎன்  கூட்டணியின்    நிலைப்பாட்டுக்கு   எதிர்ப்புத்   தெரிவித்து    மசீச,  கெராக்கான்,  மஇகா   ஆகியவை    அதிலிருந்து   விலக  வேண்டும்   என்று   லிம்  கூறியிருந்தார்.

அதன்  தொடர்பில்    போலீசார்  லிம்மை  விசாரிக்க   விரும்புவது    சரி.  ஆனால்,  போயும்  போயும்    ஜனவரி  27-இல்  சீனப்   புத்தாண்டுக்கு  முதல்   நாள்தான்   விசாரிக்க   வேண்டுமா.

“அதைவிட   அவர்கள்   என்னைக்   கைது   செய்திருக்கலாம். அது  எப்படிப்பட்ட   நாள்   என்பது   அவர்களுக்குத்   தெரியாதா?”,  என்று   சீறிய   லிம், “எனக்கு    முதலமைச்சர்   என்று  மரியாதை   காட்டாவிட்டாலும்   பரவாயில்லை,  ஆனால்,   புத்தாண்டுக்கு   முதல்    நாள்   எங்களுக்கு   முக்கியமான     நாள்  அல்லவா”,  என்றார்.

சீனப்  புத்தாண்டுக்கு  முதல்   நாள்   சீனர்கள்    குடும்ப   விருந்தை     நடத்துவது    வழக்கம்.  அதில்      குடும்ப   உறுப்பினர்களும்   உறவினர்களும்   அவர்கள்   எங்கிருந்தாலும்    வந்து   கலந்துகொள்வார்கள்.

அத்துடன்  சீனப்புத்தாண்டு    நேரத்தில்   போலீஸ்    விசாரணை    நடப்பது   “துர்  அதிர்ஷ்டம்”  என்றும்   கருதப்படுகிறது.

அன்றைய  தினம்    நிறைய   நிகழ்ச்சிகள்   இருப்பதால்   போலீஸ்   விசாரணைக்குச்   செல்லப்போவதில்லை   என்று  முடிவு   செய்துள்ளார்  லிம்.