டிஏபி 32 இடங்களை வைத்துக்கொண்டு புத்ரா ஜெயாவை ஆள முடியாது: கூய் சாடல்

gooi14வது  பொதுத்   தேர்தலில்   எதிரணி   வெற்றி   பெற்றால்    டிஏபிதான்   புத்ரா  ஜெயாவில்  ஆட்சி   செலுத்தும்    என்று   கூறும்   பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்கை   பிகேஆர்  சாடியுள்ளது.

ஜனவரி  17-இல்   நஜிப்   கெடா    சென்றிருந்தபோது,    பொதுத்   தேர்தலில்    எதிரணி    வெற்றி   பெற்றால்  புத்ரா  ஜெயாவில்   ஆட்சி   செய்யப்போவது    பிகேஆரோ,   பார்டி   பிரிபூமி   பெர்சத்து   மலேசியாவோ,  பார்டி  அமனா   நெகராவோ    அல்ல   என்றும்    டிஏபிதான்   கூடுதல்   இடங்களை   வெல்லும்   என்பதால்    அதுதான்    ஆட்சி    செய்யப்போகிறது    என்றும்   கூறியிருந்தார்.

“கெடாவில்   36   சட்டமன்ற   இடங்களில்  இரண்டை   மட்டுமே  வென்ற    டிஏபி   அரசாங்கத்தைத்   தன்   கட்டுப்பாட்டில்   வைத்துக்கொள்ளும்    என்பது   சுத்த  அபத்தம்”,  என்று   பிகேஆரின்   அலோர்    ஸ்டார்   எம்பி    கூய்    ஹிசியாவ்  லியோங்   கூறினார்.

“13வது  பொதுத்  தேர்தலில்   222   நாடாளுமன்ற   இடங்களில்   அக்கட்சி  வென்றது   38  இடங்களை    மட்டுமே.  அதுவும்   மசீச,   கெராக்கான்,  மஇகா    இடங்களிலும்   சாபா,  சரவாக்கில்     மலாய்க்காரர்- அல்லாதார்   தொகுதிகளிலும்  மட்டுமே    அது    போட்டியிட்டது  ”,  என்றவர்   குறிப்பிட்டார்.

மலாய்க்காரர்கள்    அதிகமாக    உள்ள    கூட்டங்களில்   டிஏபி- எதிர்ப்பு   உணர்வுகளைத்   தூண்டி  விடுவதே  நஜிப்புக்கு   வாடிக்கையாகி    விட்டது    என்று  கூய்   குற்றம்   சாட்டினார்.