14வது பொதுத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிகழுமானால் பாஸ் அடியோடு ஒழிந்து போகும் என்று Invoke கருத்துக்கணிப்பு மையம் வெளியிட்டுள்ள ஆருடத்தை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் ஒதுக்கித் தள்ளினார்.
104,340 பேரிடம் செய்யப்பட்ட கருத்துக் கணிப்பான அது மேசையடியில் இருந்தவாறு செய்யப்பட்ட ஆய்வு என்று குறிப்பிட்ட ஹாடி , பாஸ் நேரடியாக களத்துக்குச் சென்றே வாக்காளர்களின் உணர்வுகளைக் கண்டறிந்துள்ளது என்றார்.
“எங்கள் ஆய்வு விரிவானது. எங்களின் இயந்திரம் பெரிது. எங்களுக்கு நாடு முழுக்க கிளைகள் உண்டு. அவர்களுக்கு இல்லை”, என்றார்.
பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லியால் உருவாக்கப்பட்ட இன்வோக் கருத்துக் கணிப்பு மையம் மும்ம்முனைப் போட்டி நிகழுமனால் இஸ்லாமியக் கட்சி எல்லா இடங்களிலும் மண்ணைக் கவ்வும் என்று கூறியிருந்தது.
ஹாடி, பார்டி அமனா நெகராவைத் தவிர்த்து மற்ற எதிர்க்கட்சிகளுடன் தேர்தல் ஒத்துழைப்பு குறித்து பேச்சு நடத்த பாஸ் தயார் என்றும் கூறினார்.
அப்படி என்றால் டிஏபியுடன் கொண்டிருந்த பிணக்கெல்லாம் போய்விட்டதா என்று வினவியதற்கு, “அதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும், (பக்கத்தான் ரக்யாட்டிலிருந்து) பாஸை வெளியேற்றியது அவர்கள்தானே, நாங்களாகவே வெளியேறவில்லையே”, என்றார்.
பாஸ் எதிர்க்கட்சிகளுடன் முழு-அளவு ஒத்துழைப்புக்கு ஆயத்தமாக இல்லை என்று கூறிய ஹாடி, டிஏபி “தன்னையே உயர்வாகக் கருதும் ஒரு கட்சி” என்றும் அமனா “சந்தர்ப்பவாதக் கட்சி” என்றும் சாடினார்.
பார்டி பிரிபூமி பெர்சத்துக் கட்சியுடன் ஒத்துழைப்பது குறித்து இன்னும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
“அதனால் பாஸுக்கு எந்த அளவு நன்மை அல்லது தீமை என்பதை ஆராய வேண்டியுள்ளது.
“அரசியலில் எதுவும் நிரந்தரமல்ல. நண்பர்கள் எதிரிகள் ஆகலாம், எதிரிகள் நண்பர்கள் ஆகலாம்”, என்று ஹாடி கூறினார்.
பாஸுடன் ஒத்துழைக்க விரும்பும் எந்தக் கட்சியும் பாஸின் முறைகளைத்தான் பின்பற்ற வேண்டும் என்றவர் சொன்னார்.
“எதிரணியில் மிகப் பழைய கட்சி நாங்கள்தான். பல ஏற்ற இறக்கங்களைக் கண்டவர்கள். மற்ற கட்சிகள் அப்படி அல்ல.
“அதனால் மற்ற கட்சிகள் எங்களுக்கு அரசியல் கற்றுத்தர முடியாது. நாங்கள் முதிர்ச்சி பெற்றவர்கள். ஒத்துழைக்க விரும்பினால் அவர்கள்தான் எங்களைப் பின்பற்ற வேண்டும்”, என்றார்.