துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியைத் தோற்கடிக்க சதி நடப்பதாகவும் அதற்குப் பின்னணியில் எதிரணி இருப்பதாகவும் கூறப்படுவதை பொக்கோக் சேனா எம்பி மாபுஸ் ஒமார் மறுக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை அம்னோ உதவித் தலைவருமான ஜாஹிட், பாகான் டத்தோவில் தம்மைத் தோற்கடிக்க எதிரணியினர் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதாகக் கூறினார் என்று செய்தி வெளிவந்திருந்தது.
“ஜாஹிட் எதற்காக அப்படி ஓர் அறிக்கையை வெளியிட வேண்டும்?”, என மாபுஸ் வினவினார்.
“சில தரப்பினர் 14வது பொதுத் தேர்தலில் அவரைக் கவிழ்க்கவும் தோற்கடிக்கவும் விரும்புவதாக அவர் கூறியது ஏன்?
“எதிரணி இதற்குப் பொறுப்பல்ல. குறை சொல்வதாக இருந்தால் நீங்கள் அம்னோ- பிஎன் தலைமையைத்தான் குறை சொல்ல வேண்டும்”, என்றாரவர்.
தேர்தல் என்று வந்து விட்டால் எதிரணி ஜாஹிட்டின் தொகுதி உள்பட, எல்லா இடங்களிலும் போட்டியிடத்தான் விரும்பும் என்று மாபுஸ் கூறினார்.
“பாகான் டத்தோ தொகுதியை மட்டுமல்ல, (பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின்) பெக்கான் தொகுதி உள்பட நாடாளுமன்றத்தின் 222 இடங்களையும் வெல்வதுதான் எதிரணியின் நோக்கமாக இருக்கும்.
“எனவே, ஜாஹிட் அம்னோவுக்குள் நடைபெறும் உள்ளடி வேலையை மனத்தில் வைத்துத்தான் அப்படிச் சொல்லி இருக்க வேண்டும்”, என்றார்.
ஜாஹிட் அவரைக் கவிழ்ப்பதற்குத் திரைமறைவில் ஒரு இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அடையாளம் கண்டிருக்கலாம் என்று கூறிய மாபுஸ் அதனால்தான் அவர் அப்படிக் கூறினார் போலும் என்றார்.