துணைப் பிரதமர் பதவி கேட்டதை ஒப்புக்கொள்கிறார் மசீச பிரதிநிதி தி லியன் கெர்

 

MCATiLianKerதுணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டது யார், டிஎபியா அல்லது மசீசவா? துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்ற கோரிக்கை உண்மையிலே கேட்கப்பட்டதா?

சமீபத்தில் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் டிஎபி துணைப் பிரதமர் வேண்டும் என்று கேட்டிருந்ததாக கூறியிருந்தார். பின்னர், தாம் கூறியது தவறு என்றும் துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று கேட்டது மசீச என்றும் மகாதிர் விளக்கம் அளித்தார்.

மேலும், அக்கோரிக்கையை விடுத்தவர் மசீசவின் துணைத் தலைமைச் செயலாளர் லோக் யுயென் யோவ். அவர் 2009 ஆண்டில் துணை அமைச்சராக பிரதமர்துறையில் இருந்தார் என்ற தகவலையும் துணை அமைச்சர் லோக் பிரதமர் நஜிப்புக்கு விடுத்திருந்த அக்கோரிக்கை மலேசிய தகவல் இலாகாவின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் மகாதிரி கூறினார்.

தகவல் இலாகாவின் வலைத்தளத்தில் பகசா மலேசியாவில் எழுதப்பட்டுள்ள அந்த அறிக்கை கூறுகிறது: “டத்தோ லோக் யுயென் யோவ், மசீச துணைத் தலைமைச் செயலாளர், அவரது வலைத்தளத்தில் ஒரு துணைப் பிரதமர் மற்றும் ஒரு துணை பிஎன் தலைவர் ஆகிய பதவிகளை அவரது (மசீச) தலைவருக்காக உருவாக்கி “உண்மையான அதிகாரப் பகிர்வை” பிரதிபளிக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப்பை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்”,

துணைப் பிரதமர் பதவி கேட்பதில் தவறொன்றும் இல்லையே!

மசீச உண்மையிலேயே துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று கேட்டுக்கொண்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மசீசவின் மத்தியக்குழு உறுப்பினர் தி லியன் கெர் மசீச கடந்த காலத்தில் அப்படி ஒரு கோரிக்கையை விடுத்திருந்ததை ஜனவரி 21, 2017 இல் ஒப்புக்கொண்டுள்ளார்.

மகாதிர் மசீசவின் கோரிக்கையை ஜனவரி 20 இல் வெளிப்படுத்தியப் பின்னர் தி லியன் கெர் அக்கோரிக்கையைத் தற்காத்து பேசினார். சீன சமூகத்தின் விருப்பத்தைத் தெரிவிப்பது ஒரு குற்றம் அல்ல என்றும் தெரிவித்தார் என்று மலே மெயில் ஓன்லைன் செய்தி கூறுகிறது.

மசீச துணைப் பிரதமர் பதவியைக் கேட்கவே இல்லை

ஆனால், நேற்று (ஜனவரி 22) லுக்குட்டில் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மசீச துணைப் பிரதமர் பதவியைக் கோரியதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார்.

தாம் நாட்டின் நம்பர் ஒன் தலைவராக இருந்து வரும் காலம் முழுவதிலும் அந்த பாரிசான் பங்காளிக் கட்சி ஒரு முறைகூட துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் பதவிகளைக் கேட்டதே இல்லை என்றார் நஜிப்.

சமீபத்தில் மசீச துணைப் பிரதமர் பதவியைக் கேட்டதாக கூறப்பட்டது. “நான் பிஎம் ஆன காலத்திலிருந்து, மசீச துணைப் பிரதமர் பதவியைக் கேட்டதே இல்லை. இது ஒரு பொய்.

“நான் மறுக்கிறேன். மசீசவும் மறுக்கும்படி கேட்டுகொள்கிறேன். மசீசவுக்கு மூன்று அமைச்சர் பதவிகள் இருக்கின்றன மற்றும் அவர்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றனர். அதிகமான பல்டிகள் அடிக்க வேண்டாம்”, என்று நஜிப் கூறினார்.