ஜல்லிக்கட்டை தமிழரின் தேசியப் பண்பாட்டு நிகழ்வாக்கக் கோரி இந்தியத் தூதரகத்திடம் மனு!

jallikattu2ஜல்லிக்கட்டு சார்பாக கைதான அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்வதோடு ஜல்லிக்கட்டை தமிழரின் ஒரு தேசிய பண்பாட்டு விழாவாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என இந்திய அரசு கேட்டுக்கொள்ளப்பட்டது. இது சார்பான மனு ஒன்றை அரசு சார இயக்கங்கள் கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் இன்று சமர்பித்தன.

இயக்கங்களை பிரதிநிதித்த ஐந்து பேர் அடங்கிய குழுவை தூதரின் பிரதிநிதியான இராமகிருஷ்ணன் அவர்கள் சந்தித்து மனுவை பெற்றுக்கொண்டார். மலேசியாவில் வாழும் தமிழர்களின் நிலைப்பாடு பற்றிய விளக்கங்களை பெற்ற அவர், மனுவானது மத்திய அரசின் கவனித்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

இது சார்பாக கருத்துரைத்த இந்தக் குழுவுக்கு தலைமையேற்றிருந்த சிலாங்கூர் தமிழ்ச்சங்கத்தின் இலா சேகரன், தமிழர்களின் பண்பாடு ஆழமானது, அது அழிந்தால் தமிழ் இனமே அழிந்து விடும் என்றார்.

மலேசியாவில் வாழும் தமிழர்கள், தமிழகத் தமிழர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவர்கள். சமயம், மொழி, பண்பாடு போன்றவை வாழையடிவாழையாகத் தமிழ் நாட்டின் தன்மைகளையே மையமாக்கி வந்துள்ளது. பல வகைகளில் சோரம் போய் விட்ட நமது நிலைப்பாடு இன்று ஜல்லிக்கட்டு போராட்டம் என்ற வகையில் வெடித்துள்ளது என்றார் சேகரன். இனி வரும் காலம் ஒரு புதிய வழிமுறையை உருவாக்கும் என்றார்.

முப்பது இயக்கங்களின் ஆதரவோடு சமர்ப்பிக்கப்பட்ட   இந்த நிகழ்வில் கிள்ளான் மாநகராட்சி மன்ற உறுப்பினர் மணிவண்ணன், இரா பெருமாள், கா. உதயசூரியன் மற்றும் வழக்கறிஞர் கா. ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.