மலேசியாவை ஓர் இஸ்லாமிய நாடாக்க விரும்பினால் மலேசிய அரசமைப்புச் சட்டத்திற்கு திருத்தங்களைக் கொண்டுவருமாறு முன்னாள் சட்ட அமைச்சரான ஸைட் இப்ராகிம் அரசாங்கத்திற்கும் பாஸ் கட்சிக்கும் இன்று சவால் விட்டார்.
இதுதான் அரசாங்கத்தின் நோக்கம் என்றால் அதைத் துணிச்சலாக கூற வேண்டும். மாறாக, ஷரியா நீதிமன்றம் (கிரிமினல் நீதி பரிபாலனம்) சட்டம் (சட்டம் 355) திருத்தங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கக்கூடாது என்றாரவர்.
“உங்களுடைய பெருந்திட்டத்தை மக்களிடம் கூறுங்கள்; தலிபான் முறையிலான இஸ்லாம் உங்களுக்கு வேண்டுமென்றால், நாட்டின் இஸ்லாமிய முறைப்படுத்தப்பட்ட கிரிமினல் சட்டத்தை ஒவ்வொருவருக்கும் விதிக்க வேண்டும்”, என்று கூறிய ஸைட், பெடரல் அரசமைப்புச் சட்டம் பிரிவு 8 சட்டத்தின்முன் சமத்துவம் என்ற சிறப்பான கோட்பாட்டை கொண்டிருப்பதை அவர் தமது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஸைட் இப்ராகிம் இந்த அரசமைப்புச் சட்ட திருத்தத்தை ஆதரிக்குமாறு முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகமட்டுக்கும் சவால் விட்டுள்ளார். இந்த முன்னாள் நீதிபதி நாடாளுமன்றம் ஒரு சாதாரண பெரும்பான்மையில் தண்டனைச் சட்டத் தொகுப்புக்கு (Penal code) திருத்தங்கள் செய்து அதன்கீழ் ஹூடுட் சட்டத் தண்டனைகளை அனைத்து மலேசியர்களுக்கும் விதிக்கலாம் என்று வலியுறுத்தியிருந்ததற்காக மேற்குறிப்பிட்ட சவாலை ஸைட் விடுத்தார்.
வேறுவகையில் சொன்னால், முஸ்லிம்-அல்லாதவர்கள் சட்டம் 355 திருத்தத்தை எதிர்க்கக்கூடாது. அவர்கள் எதிர்த்தால், பிரதமர் தண்டனைச் சட்டத் தொகுப்புக்கு சாதாரணமான திருத்தத்தைச் செய்து அனைவரையும் ஹூடுட் சட்டத்தின்கீழ் கொண்டுவந்து விடுவார் என்று ஸைட் விளக்கம் அளித்தார்.
அரசமைப்புச் சட்டம் சமயச்சார்பற்றது என்று நீதிமன்றம் பிரகடனம் செய்துள்ளது
1988 ஆம் ஆண்டில், மலேசியாவின் உச்சநீதிமன்றம் (Supreme Court)பெடரல் அரசமைப்புச் சட்டம் சமயச்சார்பற்ற ஒன்று என்று பிரகடனம் செய்துள்ளது. ஆகவே, இது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது.
ஹூடுட் சட்டத் தண்டனைகளை தண்டனைச் சட்டத் தொகுப்புவழி அமல்படுத்த வேண்டுமென்றால் பெடரல் அரசமைப்புச் சட்டத்தை மாலத்தீவு அல்லது சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் சட்ட மாதிரிக்கு மாற்ற வேண்டும், அச்சட்டம் அந்நாடு ஓர் இஸ்லாமிய அரசு என்று கூறுகிறது என்றார் ஸைட்.
இது போன்ற அடிப்படை மாற்றங்கள் மூலமாக மட்டுமே பிரதமர் தண்டனைச் சட்டத் தொகுப்புக்கும் மற்ற சம்பந்தப்பட்ட சட்டங்களுக்கும் திருத்தங்கள் கொண்டுவந்து அவற்றை இந்நாட்டில் அகற்ற இயலாத அளவில் நிலைநிறுத்த முடியும் என்று ஸைட் மேலும் கூறினார்.