படுக்கைகள், ஐஸ் கிரீமுடன் எம்பி அலுவலகம் வந்த ஜமால்

jamalசிலாங்கூரில்   தீயொழுக்கத்துக்கு    எதிரான   இயக்கத்தை   முடுக்கி   விட்டிருக்கும்   சுங்கை   புசார்     அம்னோ     தலைவர்   ஜமால்    முகம்மட்    யூனுஸ்,  தம்  இயக்கத்துக்கு  மேலும்   வலுச்சேர்க்க  ஒரு   டசன்   கட்டில்களுடன்   ஷா   ஆலம்   செயலகக்  கட்டிடத்துக்கு    வந்தார்.

கட்டில்களின்மேல்  மெத்தைகள்.  மெத்தைகளில்    விரிக்கப்பட்டிருந்த   விரிப்புகளில்   “DAP – Dapat Aiskrim Percuma” (DAP – இலவச   ஐஸ்  கிரீம்)  என்றும்   தலையணைகளில்   “Rumah Urut Selangorku”(சிலாங்கூர்  உடம்பு  பிடித்துவிடும்   நிலையம்)   என்றும்   எழுதப்பட்டிருந்தது.

சிலாங்கூர்   அரசு   விபசார  விடுதிகளாக   செயல்படும்   உடம்புப்பிடி   நிலையங்களைக்   கட்டுப்படுத்த    போதுமான   நடவடிக்கைகளை   எடுக்கவில்லை    என்று   ஜமால்  கூறினார்.

அதை   வலியுறுத்தவே  இந்த   நூதன   போராட்டமாம்.

ஜமால்   இலவசமாக   ஐஸ்  கிரீமும்   வழங்கினார்.  ஐஸ்  கிரீம்   வைக்கப்பட்டிருந்த   ஐஸ்  பெட்டியில்   “Azmin Ais Krim, sekali rasa pasti nak lagi” (அஸ்மின்   ஐஸ்  கிரீம்,  ஒருமுறை   சுவைத்தால்  மீண்டும்  மீண்டும்   விரும்புவீர்கள்)   என்று    எழுதப்பட்டிருந்தது.

சிலாங்கூர்    மந்திரி    புசார்   பாலியல்   விவகாரமொன்றில்   சிக்கிக்   கொண்டிருப்பதாகக்  கூறப்படுகிறது.  அதைக்  கிண்டல்   செய்யும்   நோக்கில்தான்   அவ்வாறு   எழுதப்பட்டிருந்ததாக   தெரிகிறது.