தொலைக்காட்சியில் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் 60ஆம் ஆண்டு மணிவிழாவைப் பார்த்தது முதலே கடுமையான மன அழுத்தம் ஏற்படத் தொடங்கியது. அப்படி ஒரு இயக்கம் இருந்ததாக நினைவு ஒன்று கருப்பு வெள்ளையில் வந்துபோனது. கோ.சாரங்கபாணி மூலம் தமிழ் முரசு நாளிதழில் மாணவர் மணிமன்றம் தொடங்கி, பலரையும் எழுத வைத்து, வாரம் ஒரு மாணவர் மணிமன்ற இணைப்புடன் அவர்கள் எழுத்தை ஊக்குவித்த காலம் ஒன்று சட்டென நினைவுக்கு வருகிறது. ரெ.கார்த்திகேசு, சை.பீர்முகம்மது, அரு.சு.ஜீவானந்தன் என இன்றைக்கு மலேசிய இலக்கியச் சூழலின் எழுத்தாளர்கள் அன்று மாணவர்களாக எழுதத் தொடங்கினர்.
பினாங்கில் தோன்றிய முதல் தமிழ் இளைஞர் மணிமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்களும் அசன்கனி, காரைக்கிழார், கரு.திருவரசு, மை.தி.சுல்தான் போன்ற எழுத்தாளர்கள்தான். இவர்கள் இலக்கியத்தைத் தவிர வேறு பல கலைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தனர்.
இரண்டாவது தமிழ் இளைஞர் மணிமன்றம் கோலாலம்பூரிலும் மூன்றாவது மணிமன்றம் தெலுக் இந்தானிலும் என வளர்ந்து ஏழு மன்றங்கள் நாட்டில் ஆங்காங்கு உருவாகி, அதனை இணைத்து பேரவை ஒன்றை உருவாக்கியபோது அதற்குத் தலைவராக இருந்தவர் சா.அ.அன்பானந்தன். ‘மரவள்ளிக்கிழங்கு’ போன்ற அவரது நாவல் இன்றும் வாசிக்கத்தக்கதே. எண்ணற்ற நாடகங்களை எழுதியவர்.
ம.இ.கா மிரண்ட காலம்!
தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையைக் கண்டு ம.இ.கா மிரண்ட காலம் ஒன்று உண்டு. மணிமன்றங்கள் மூலம் அரங்கேறிய ஓரங்க நாடகங்கள் சமுதாயத்தின் அன்றைய பிரச்சினைகளைப் பேசியதன் மூலம் ம.இ.காவின் பலவீனங்களை நோக்கி கைகாட்டிக்கொண்டே இருந்தன.
சா.அ.அன்பானந்தனுக்குப் பிறகு மணிமன்ற தலைவராக வந்த கிருஷ்ணசாமி ம.இ.கா இளைஞர் பகுதி செயலாளராகப் பொறுப்பேற்றபோதே அதன் கம்பீரம் சரியத் தொடங்கியது என வல்லினம் ஆவணப்படத்திற்கு சை.பீர்முகம்மது வழங்கிய நேர்காணல் வழி அறியமுடிகிறது. 600க்கும் மேற்பட்ட மணிமன்றங்களின் உறுப்பினர்களுக்குத் தலைவராக இருந்தவர் ஒரு கட்சியின் இளைஞர் பகுதிக்குப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
மொழி, இன, சமுதாய தேவைக்காக அரசிடமும் அதிகாரத்திடமும் அழுத்தம் கொடுக்க வேண்டிய மாபெரும் சக்தி அதன் கால்களுக்கு பணிவிடை செய்துகொண்டிருந்தது. அதன் நீட்சி இன்னும் முடியவில்லை என்பதையே நடந்துமுடிந்த மணிவிழாவில் காண முடிகிறது. 292 கிளைகளுடன் 24,552 உறுப்பினர்கள் உள்ள மணிமன்றம் அண்மைய காலத்தில் சமுதாய மாற்றத்துக்காக என்ன செய்தது என இன்று வரை புரியவில்லை.
ம.இ.கா கட்சியின் முக்கியப்பொறுப்பில் இருக்கும் முரளியின் தலைமையில் அரசிடம் மானியம் வாங்குவதற்கென்றே உருவாகும் திடீர் இயக்கங்களுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் செயல்படும் மணிமன்றம் மூலம் ஏதாவது ஒருசில ஆக்ககரமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா என அறிய எல்லாரையும் போலவே நானும் ஆவலாகவே இருக்கிறேன்.
எல்லாம் ஜால்ரா திட்டங்கள்
மலேசியாவில் உள்ள தமிழ் மாணவர்களுக்கும் இளையர்களுக்கும் தலைமைத்துவப் பயிற்சி, தொழில்நுட்பப் பயிற்சி விளையாட்டுப் பயிற்சிப் பட்டறைகளை பல மாநிலங்களில் நடத்துவதாகவும் தமிழர் திருநாளைக் கொண்டாடுவதாகவும் அவர்களது இணையப் பக்க முகப் பக்கச் செய்திகள் சொல்கின்றன. அவையும் முழுமையாகப் பதிவேற்றப்படவில்லை. (http://manimandram.org.my/) சரி மணிமன்ற தொலைக்காட்சியையாவது பார்க்கலாம் என்றாலும் அதுவும் முழுமை இல்லை.
(https://www.youtube.com/playlist?list=PLFxWnmxODV68sXKV1xH9a3YvCaqHX5T8X) ஆனால் எல்லாவற்றிலும் தலைவரின் படம் வந்து வந்து போகிறது. இப்படிப் பல பயிற்சிகள் நடந்ததாகச் சொன்னாலும் அவற்றின் வெளிபாடு (OUTPUT)என்ன? அரசிடம் மானியம் பெற்று இளைஞர்களின் வளர்ச்சிக்காக உதவுவதாகச் சொல்லும் மணிமன்றத்தின் இத்தனைகால சாதனை என்ன என்று தெரிந்தால் சமுதாயம் உருப்பட்டுவிடும் என நிம்மதி அடையலாம். நாட்டில் ஏராளமான இயக்கங்கள் மானியம் பெற்று நடத்தும் திடீர் பட்டறைகள் குறித்தும் அதன் மூலம் நிகழாத மாற்றங்கள் குறித்தும் சோர்ந்திருக்கும் என்னைப் போன்ற அவநம்பிக்கைவாதிகளுக்கு இப்படியான சில சான்றுகள் தேவைப்படுகின்றன.
மணிவிழாவில், கடலோரம் ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து பொங்கல் வைப்பது போன்ற நாடகங்களை நடத்திக்காட்ட மட்டுமே நீண்ட நெடிய வரலாறு கொண்ட ஓர் இயக்கத்தால் முடிகிறதென்பது எவ்வளவு பெரிய வீழ்ச்சி. இன்று அரசியலில் உச்சத்தை அடைய நினைப்பவர்களுக்கெல்லாம் மொழியும், அதை சார்ந்த இயக்கமும் ஊறுகாய்போல உதவுகிறது. மொழி, இனம் , சமுதாயம், கலாச்சாரம் எனக்கூறிக்கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் இந்தச் சமுதாயத்தைத்தின் கண்களை மொண்ணையாக மாற்றலாம்.
இவர்கள் நடத்தும் ஒருநாள் கூத்துக்கு லட்சங்கள் செலவாகும். ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களை பஸ் பிடித்து அனுப்பி அரங்கை நிறைப்பார்கள். மொழியையும் இலக்கியத்தையும் வளர்த்துவிட்டதாகப் பேசுவார்கள். எந்தச் சுரணையும் இல்லாமல் சமுதாயம் கைதட்டும். எல்லாம் மாறிவிட்டதாக நம்புவார்கள். கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து அரசும் அடுத்த ஆண்டுக்கான நிதியை ஒதுக்கும்.
அதுவும் ஒருநாள் கூத்துக்காகக் கருகும். பாவப்பட்ட சமுதாயம் அதற்கும் கைதட்டும். இளைஞர்களைக் காட்டி பணம் கேட்கும் ஒவ்வொரு அமைப்பிடமும் இளைஞர்கள் தங்களுக்கான தேவை என்னவென்று குரல் எழுப்பும்வரை இந்தக் கலிசடை கலாச்சாரம் ஓயப்போவதில்லை.
உரிமை சார்ந்த போராட்டம் எங்கே?
தலைமைத்துவ தொழில்நுட்பப் பட்டறைகளைத் தாண்டி மொழி வளர்ச்சிக்காகவோ மொழியை அடிப்படையாகக் கொண்ட கலை இலக்கிய நகர்ச்சிக்காகவோ மணி மன்றம் ஏதேனும் திட்டங்களை முன்னெடுத்துள்ளதா? இடைநிலைப்பள்ளிகளிலோ அல்லது குறைந்தபட்சம் தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்கள் மத்தியிலோ ஆக்ககரமான செயல்திட்டங்களுடன் அணுகியுள்ளதா?
மணிமன்றம் மூலம் விளையாட்டுத்துறையில் ஜொலிக்கும் தமிழ் இளைஞர்கள் யாரேனும் உள்ளனரா? மணி மன்றம் தனக்கென தமிழ் நூலகம் ஏதேனும் கொண்டுள்ளதா? மலேசியத் தமிழர்களின் இக்கட்டான நிலைகளை நிவர்த்தி செய்ய மாபெரும் அமைப்பான இது செயல்பட்டுள்ளதா? இன்றைய இளைஞர்களின் அடிப்படையான சிக்கல் என்ன என்ற ஆய்வுகளோ தரவுகளோ அதன் கைவசம் இருக்கிறதா?
அறிவுத்துறையில் இயங்கும் இளைஞர்களுக்கும் மணிமன்றத்துக்கும் எள்ளளவாவது தொடர்பு உண்டா? எஸ்.பி.எம் முடித்தபின் எங்கே செல்வது என தடுமாறும் இளைஞர்களை அணுகி ஆலோசனை வழங்கும் இயக்கம் ஏதேனும் தொடங்கப்பட்டுள்ளதா? கோ.சா ஆரம்பித்த தமிழ் நூலகம் குறித்தோ அதன் இன்றைய செயல்பாடுகள் குறித்தோ ஏதேனும் தெரியுமா?
மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கற்க வரும் மாணவர்கள் குறைவதை அறிந்திருக்கிறார்களா? அதை நிவர்த்திக்க திட்டம் வகுத்துள்ளார்களா? அரசின் அவ்வப்போதைய புதிய கல்வி கொள்கைகளால் தமிழ்மொழி பாதிக்கப்படும் என்பதை அறிந்துள்ளார்களா? அல்லது அவற்றை ஆதரிக்கிறார்களா? ஆதரிக்கவோ மறுக்கவோ ஏதேனும் ஆய்வுகள் உண்டா? குறைந்தபட்சம் மேற்கல்வியைத் தொடரமுடியாத இளைஞர்களுக்கு ஏதேனும் பண உதவி செய்துள்ளதா?
இதுகுறித்தெல்லாம் அவர்கள் செயல்திட்டத்தில் இல்லையென்றால் வேறு என்ன உள்ளது? அது இதுநாள்வரை எப்படி தமிழ் இளைஞர்களுக்குப் பயனளித்தது என விளக்க வேண்டிய கடமை மணி மன்றத்துக்கு உண்டு.
இந்த லட்சணத்தில்தான் மணிமன்றத் தலைவர் முரளி செனட்டர் பதவி ஒன்றை மணிமன்றத்திற்காகக் கேட்டுள்ளார்.
வை.தி.அரசு அவர்கள் மாணவர் மணிமன்றத்தை உருவாக்கிய கோ.சாரங்கபாணி குறித்து கூறியதை இங்கு நினைவு கூறலாம். “அவர் பட்டம் பதவிகளை நாடவில்லை. ஆடம்பரங்களுக்கு அடிமையாகவில்லை. தன்னை பின்னுக்குத் தள்ளி ஏழை எளியவர்களின் நலனை முன்னுக்கு வைத்தார். மக்களை அவர் ஏணியாகப் பயன்படுத்தவில்லை. மக்கள் முன்னேற வழிகாட்டினார். தங்கள் தோளில் சவாரி செய்யும் தலைவராக அவரை மக்கள் கருதியிருந்தால் அவரை ஒதுக்கியிருப்பார்கள். ஆனால் தங்கள் தோழராகவே அவரை மதித்துப் போற்றினர்” (காலச்சுவடு மார்ச் 2014)
கோ.சாரங்கபாணி முன்னெடுத்த திட்டங்களின் ஆற்றலால் அவை வெற்றியடையவில்லை. அடிப்படையில் அதுபோன்ற முன்னெடுப்புகளை ஏந்திச் செல்பவர்களுக்கு இருக்கவேண்டிய அறமே தீப்பந்தமாகி ஒளிர்கிறது. அதுவே அவர்களை மக்களை எளிதில் அடைய வைக்கிறது.
தலைவர்களாக்குகிறது. அந்த அடிப்படை குணமும் நேர்மையும் இல்லாத சுயநலவாதிகள் முன்னெடுக்கும் எந்தத் திட்டமும் சந்தேகிக்கக் கூடியவை. ஒரு தீக்குச்சி நெருப்புபோல பொசுக்கென பொங்கி அணையும் மெல்லிய ஆற்றல் மட்டுமே பெற்றது. அந்த ஒரு வினாடி எழுச்சியை மட்டுமே சமுதாயத்தின் எழுச்சி என ஊடகங்களும் படம்பிடித்துக்காட்டும். யாருக்கும் எந்தக் கேள்வியும் இல்லை.
சரியான பதிவு . இன்றைய மணிமன்றங்களில் பெரும்பான்மை அரசு மான்யத்தையும் ஆண்டுக்கு ஒரு முறை மாநில பட்டங்கள் விருதுகளுக்காகவே செயல் படுகிறது என்பது தான் மணிமன்ற சாதனை. இதனை மறுக்க முடியாது. மொழி கலை கலாச்சாரம் இலக்கியம் பண்பாட்டு முறைகளுக்காக அன்றைய மணி மன்றங்கள் பாடுபட்டன. ஆனால் இன்று நிலைமை வேறு மாதிரி . குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக கூஜா தூக்கிகளாக இருந்தால் மட்டுமே மணிமன்ற அங்கத்துவம் என்று ஆகி விட்டது . மணி மன்றத்தில் இருக்கும் ‘தமிழ் ‘இன்றைய நிலையில் மங்கி போய் இருக்கிறது .
உண்மையை கூறினீர்கள் . மீண்டும் எழுச்சி பெற புதிய தலைவர் செனட்டர் பதவிதான் வழியோ ?
,மணி உண்டு அதில் ஒலி இல்லை..
மன்றம் உண்டு அதில் ஆடாமல் அசையாமல் தாங்குவோர் உண்டு…
இனி நம்பிக்கை நாயகன் உலா வருவார்…..
MIC ஊழல்வாதிகளை கொண்ட சுயநலவாதிகளின் கோட்டை. எல்லாமே பகல் வேஷம். அவன் அவன் வங்கி கணக்கு மட்டும் ஏறலாம். தமிழர்களின் நிலை பற்றி குரல் கொடுக்க விதை இல்லாத சப்பிகள்
இப்போதாவது மணி மன்றம் தூங்கிக்கொண்டுருப்பது நமக்கெல்லாம்
மகிழ்ச்சியே ! ஆனால் செனட்டர் பதவி ஒன்று கிடைக்குமானால் ; பிறகு தூங்கவே மாட்டார்கள் !!! ஓயாமல் வெட்டு குத்துத்தான் !!!
நமக்கு நிம்மதியில்லாமல் போய்விடும்.
ஆயிரமாயிரம் கேள்விகள் கேட்டாலும் இவர்களுக்கு விடை தெரியாது ! அரசாங்கத்தின் மானியத்தில் நாலு காசு பாக்கலாம் என்று வந்த சுயநல வாதிகள் ! தமிழ் இளைஜர் மணி மன்றம் என்றால் உண்மை அர்த்தம் புரியாத ஜடங்கள் !! சங்க நாதம் என்று பெயர் சூடிக்கொண்டு ! தானை தலைவன் என்று பறை சட்ட்றி கொண்டவன் பின் சென்றபோதே ! மணி மன்றம் சுயநல வாதிகளின் கையில் சிக்கி தன் மரபை இழந்தது !!குறைந்த வருமான அரசாங்க வேளையில் , மோட்டார் சைக்கிளில் வளம் வந்து சுட்ரி , சுழன்று , சமுதாய சேவையாட்ரிய ! இளைய சமுதாயத்தின் மாபெரும் தலைவன் ச .அ. அன்பானந்தன் . அவரின் காலடியை தீண்டக்கூட தகுதி இல்லாத ஜென்மங்கள் இன்று உள்ளதுங்கள் ! அவர் அணியும் வென்னிற வேட்டி, சிரித்த கலையான முகம் , கண்ணில் வரும்போதெல்லாம் கண்கள் கலங்கும் , எமனுக்கும் தமிழன் மேல் கோபம் ! இள வயதிலேயே அவரை பறித்துக்கொண்டான் !!