பிஎம்எப் (Bumiputra Malaysia Finance Ltd)ஊழல் விவகாரத்தில் மகாதிரின் நிருவாகத்திற்கு தொடர்பு இருந்ததாக தற்போது அமெரிக்க உளவுத்துறை (சிஐஎ) வெளியிட்டிருக்கும் தகவலைவிட மிகக் கடுமையான விவகாரம் 1எம்டிபி சர்ச்சையாகும் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார்.
இன்று பினாங்கில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய லிம் சிஐஎ வெளியிட்டிருக்கும் ஆவணங்களில் புதிய தகவல் ஏதும் இல்லை. கடந்த காலத்தில் இந்த விவகாரம் குறித்து ஊடக அறிக்கைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் மூலமாக தாம் இதற்கும் கூடுதலான தகவலை வெளியிட்டுள்ளதாக கூறினார்.
“நான் இதற்கு முன்பாக கூறாத எதையும் இந்த அறிக்கை கூறவில்லை”, என்று லிம் கூறினார்.
“பிஎம்எப் ஊழல் குறித்த அரசாங்க அறிக்கை மீது நான் விவாதம் நடத்தியுள்ளேன், ஆனால் 1எம்டிபி பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்பக்கூட நான் அனுமதிக்கப்படவில்லை. நான் கிளப்டோகிரேசி என்ற சொல்லை குறிப்பிடுவதற்குக்கூட அனுமதிக்கப்படாமல் போகலாம்”, என்றாரவர்.
இதற்கு மாறாக, 1எம்டிபி பற்றிய தேசியக் கணக்காய்வாளரின் அறிக்கை அதிகாரப்பூர்வ இரகசியச் சட்டத்தின்கீழ் வகைசெய்யப்பட்டுள்ளதை லிம் சுட்டிக் காட்டினார்.
“மேலும், 1எம்டிபி ஊழலைப் போலில்லாமல் பணம் மகாதிரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு சென்றதாக சிஐஎ அறிக்கையில் கூறப்படவே இல்லை”, என்றும் லிம் கூறினார்.