ஜனவரி 23-இல், அமெரிக்கா பசிபிக் வட்டார பங்காளித்துவ ஒப்பந்தத்திலிருந்து (டிபிபி) வெளியேறுவதாக அறிவித்ததை அடுத்து மலேசியா ஆசியான் நாடுகளுடனும் ஆசிய நாடுகளுடனும் வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கும்.
மலேசியா இனி ஆசியான் நாடுகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கும் என்றும் அதனை அடுத்து வட ஆசிய நாடுகளான சீனா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்டபா முகம்மட் கூறினார்.
“சீனாதான் இன்னமும் நம்முடைய மிகப் பெரிய வணிகப் பங்காளி. இது ஒன்றும் புதிதல்ல. நாம் எப்போதும் சீனாவுடன் ஒத்துழைத்து வந்துள்ளோம்”, என்றாரவர்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஜனவரி 23-இல் பதவி ஏற்றவுடன் டிபிபி-இலிருந்து வெளியேறுவதாக அறிவித்ததுதான் அவர் செய்த முதல் வேலை என்பது குறிப்பிடத்தக்கது.