சாபாவில், சனிக்கிழமை புலாவ் மெங்காலும் தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது கடலில் மூழ்கிய உல்லாசப் படகில் இருந்த மேலும் அறுவரைத் தேடும் பணி தொடர்கிறது.
கடல் போக்குவரத்து அமலாக்க வாரிய(எம்எம்இஏ) பேச்சாளர் ஒருவர், எம்எம்இஏ உள்பட, அரச மலேசிய கடல்படை, அரச மலேசிய விமானப் படை எனப் பல அமைப்புகள் ஈடுபட்டுள்ள தேடல் மற்றும் மீட்புப் பணி காலை 7 மணிக்குத் தொடங்கியதாகக் கூறினார்.
தேடும் பணியில் புருணை டாருல்சலாமும் சேர்ந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். புருணை குழு அதன் கடல் பிரதேசத்தில் தேடி வருகிறது.
சனிக்கிழமை, அந்த உல்லாசப் படகு மூன்று பணியாளர்களுடனும் 28 சீனச் சுற்றுப்பயணிகளுடனும் தஞ்சோங் ஆரு படகுத் துறையிலிருந்து புலாவ் மெங்காலும் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது கடுமையான புயல் காற்றுகளாலும் பெரிய அலைகளாலும் தாக்கப்பட்டுக் கடலில் மூழ்கியதாக நம்பப்படுகிறது.
மூழ்கிய உல்லாசப் படகிலிருந்த 22 பேர் மீட்கப்பட்டு ஒரு மீன்பிடிப் படகில் இன்று கோத்தா கினாபாலு வந்து சேர்ந்தனர். அவ்விபத்தில் இறந்த மூவரின் உடல்களும் அந்த மீன்பிடிப்படகில் இருந்தன.