பூமிபுத்ரா மலேசியா நிதி நிறுவன(பிஎம்எப்) ஊழல் குறித்து மீண்டும் விவாதிக்கத் தொடங்கியிருப்பதும் அதனை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் தொடர்புப்படுத்த முனைவதும் 1எம்டிபி ஊழலிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சிதான் என்று வழக்குரைஞர் ஹனிப் காத்ரி கூறுகிறார்.
மகாதிரின் வழக்குரைஞரான ஹனிப், “தாக்குதல்தான் தன்னைத் தற்காக்கும் சிறந்த வழி” என்பது நல்ல உத்திதான், ஆனால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அந்த உத்தியைக் கைக்கொள்ளக் கூடாது என்று ஓர் அறிக்கையில் கூறினார்.
பிஎம்எப் ஊழல் விவகாரம் மகாதிர் ஆட்சியின்போதுதான் வெளிச்சத்துக்கு வந்தது என்பதற்காக அந்த ஊழலை அவருடன் இணைத்துப் பேசும் முயற்சி பிழையானது. அந்த ஊழல் அவரது காலத்துக்கு முன்பே தொடங்கி விட்டது என்றாரவர்.
மகாதிரே கடந்த செவ்வாய்க்கிழமை அவரது வலைப்பதிவில், பிஎம்எப் விவகாரத்துக்கும் 1எம்டிபி விவகாரத்துக்குமிடையிலான வேறுபாட்டை விவரித்திருப்பதை ஹனிப் சுட்டிக்காட்டினார்.
மற்றவற்றோடு, பிஎம்எப் விவகாரத்துக்கு அப்போதைய அரசாங்கத்தின் முறைகேடுதான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படவில்லை என்பதையும் அது அப்போதைய பிரதமருடன் இணைத்துப் பேசப்படவில்லை என்பதையும் மகாதிர் கூறியிருந்தார்.
“அதற்கு முற்றிலும் மாறாக, 1எம்டிபி விவகாரத்துக்கு இப்போதைய அரசாங்கத்தின் முறைகேடான நடவடிக்கைதான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது”, என்று கூறிய மகாதிர், அதன் மூலமாக நஜிப்பும் குற்றஞ்சாட்டுக்கு ஆளாகியுள்ளார் என்றார்.