எம்பி: ஏஜியின் மேல்முறையீட்டை விசாரணை செய்ய அவசரம் காட்டப்படுவது ஏன்?

nurulதேர்தல்   ஆணையம் (இசி)  சார்பில்   சட்டத்துறைத்   தலைவர்   அலுவலகம்    செய்துள்ள   மேல்முறையீட்டை   விசாரிப்பதற்கு    முறையீட்டு   நீதிமன்றம்   அவசரம்   காட்டுவது    ஏன்    என்று   லெம்பா   பந்தாய்   எம்பி   நூருல்    இஸ்ஸா    அன்வார்   வினவுகிறார்.

வழக்கமாக,   ஒரு   மேல்முறையீடு    பதிவு    செய்யப்பட்டதும்   அதை   விசாரிப்பதற்கு    இரண்டு   மாதங்கள்   கழித்து    ஒரு   தேதி    முடிவு     செய்யப்படும்.   ஆனால்,   லெம்பா   பந்தாய்    தொகுதி    தொடர்பான   வழக்கைப்   பொறுத்தவரை  பிப்ரவரி  13-இல்        ஏஜியின்   மேல்முறையீட்டை   விசாரிப்பதற்கு   நாள்  குறிக்கப்பட்டுள்ளது.

“ஏஜி   அலுவலகம்   எந்த   அடிப்படையில்   மேல்முறையீடு    செய்கிறது   என்பது   எங்களுக்குத்    தெரியாது.  மேல்முறையீட்டு   ஆவணங்கள்   இன்னும்   பதிவு    செய்யப்படவில்லை.   அதற்கே   இரண்டு   மாதங்களாகும்.

“ஆனாலும்,  முறையீட்டு   நீதிமன்றம்,  ஏஜி-இன்    வேண்டுகோளை   ஏற்று   விசாரணையை   விரைவாக   நடத்த    முடிவு   செய்துள்ளது.   இதில்,  (நீதித்துறையில்)  தலையீடு   ஏதுமில்லை    என்றே   நம்புகிறேன்”,  என  நூருல்  இஸ்ஸா   குறிப்பிட்டார்.

நூருல்   இஸ்ஸாவும்      அவரது    தொகுதியைச்    சேர்ந்த   பத்து   வாக்காளர்களும்     அத்தொகுதியில்  இசி-இன்  தேர்தல்  தொகுதி மறு சீரமைப்பு  நடவடிக்கைக்கு     எதிராக   வழக்கு   தொடுக்க  ஜனவரி   3-இல்    நீதிமன்ற    அனுமதியைப்  பெற்றார்கள்    என்று   கூறப்பட்டுள்ளது.