உலக அளவில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் விலை ஜனவரியில் சற்றுக் குறைந்துள்ள வேளையில் அரசாங்கம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 20 சென் உயர்த்தியது ஏன் என்பதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விளக்க வேண்டும் என்கிறார்கள் எதிரணித் தலைவர்கள்.
மலேசியர்கள் சீனப் புத்தாண்டு விடுமுறையைக் கழித்து விட்டுத் திரும்பிய வேளையில் நஜிப் அவர்களுக்கு அதிர்ச்சிதரும் “அங் பாவ்” ஒன்றைக் கொடுத்திருக்கிறார் என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறினார். ரோன் 95, ரோன் 97 விலைகள் லிட்டருக்கு ரிம2.30ஆகவும் ரிம2.60 ஆகவும் உயர்ந்துள்ளன. டீசல் 10சென் உயர்ந்து ரிம2.15 ஆனது.
“விலை உயர்வு என்றால் வலிக்கத்தான் செய்யும், என்றாலும், ஜனவரியில் விலை உயர்ந்ததை மலேசியர்களால் புரிந்து கொள்ள முடியும். அது, டிசம்பரில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் விலை உயர்ந்திருந்ததன் விளைவு. 2016 டிசம்பரில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு யுஎஸ்$51. 48-இலிருந்து யுஎஸ்$56.73 ஆக உயர்ந்தது.
“ஆனால், பிப்ரவரியில் விலை உயர்ந்தது ஏன் என்பது மலேசியர்களுக்கு விளங்கவில்லை. ஜனவரியில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு யுஎஸ்$55.86 -க்குக் குறைந்திருந்தது”, என புவா கூறினார்.
ரிங்கிட்டின் மதிப்புக் குறைவுதான் எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறுவதும் பொருத்தமாகப்படவில்லை என புவா குறிப்பிட்டார்.
2016 டிசம்பரில், ரிங்கிட்டின் மதிப்பு டாலருக்கு எதிராக ரிம 4.38இலிருந்து ரிம4.48க்குச் சரிந்தது.
ஆனால், கடந்த மாதம் ஒரு டாலருக்கு ரிம4.42 என ரிங்கிட் வலுப்பெற்றிருந்தது.
“எனவே, எரிபொருள் விலை உயர்வுக்குக் கச்சா எண்ணெய் விலை உயர்வோ, ரின்கிட்டின் மதிப்புக் குறைவோ காரணமாக இருக்க முடியாது.
“அந்த வகையில், பெட்ரோல் விலை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்தது ஏன் என்பதைப் பிரதமரும் நிதி அமைச்சருமான நஜிப்தான் விளக்க வேண்டும்”, என புவா கூறினார்.
மக்களுக்கு brim தொகை பகிர்ந்தளிக்க பணம் வேண்டாமா ?
நீங்கள் சொல்லுகின்ற காரணங்கள் எங்கள் பிரதமருக்குத் தெரியாது! தெரிந்தால் இப்படியெல்லாம் செய்யமாட்டார்!