சேவியர்: இந்தியச் சமுதாயத்தின் நன்மையைக்கருதி உரிமைக்குக் குரல் கொடுப்போம், உறவுக்குக் கைகொடுப்போம்

 

xavierஇந்தியர்களின் பிரச்சனையைக் காதுகொடுத்துக் கேட்டுத் தீர்க்கத் தாங்கள் தயார் என்று மஇகா சார்பில் அறிவித்திருக்கும் டத்தோ முனியாண்டி, உண்மையாக, நேர்மையாக இச்சமுதாயத்தின் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தீர்வுகான வேண்டும் என்ற உளப்பூர்வமான எண்ணத்துடன் இந்தியச் சமுதாய விவகாரங்களை அணுக வேண்டும் என்று ஆலோசனை கூறினார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

இந்தியர்கள் எந்த அரசியல் கட்சியில்  இருந்தாலும் இச்சமுதாயத்தின் உரிமை மற்றும் நலனே நமக்கு முக்கியம். ஆகையால், சமுதாயப் பிரச்சனைகளுக்குத் தீர்வுக்கான ம.இ.கா உண்மையாக முயன்றால் அதற்குத் துணையாக இந்தியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட கட்சிகள் கைகொடுக்கும்.

 

அதற்கு, முதலில் ம.இ.கா தேசியப் பதிவு இலாகா கூறும் நொண்டி சாக்குப்போக்குகளுக்குத் துணைபோகும் மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும். கிளிப் பிள்ளையைப் போல் தேசியப் பதிவு இலாகா கூறும் சாக்குப்போக்குகளை மீண்டும் சமுதாயத்திடம் ஒப்புவிக்கக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 

மாறாக, அடையாளப்பத்திர விவகாரத்தை எப்படித் தீர்க்க வேண்டும் என்று தேசியப் பதிவு இலாகாவுக்கும் மற்ற அரசாங்கத்துறைகளுக்கும் ஆணைபோடும் ஆற்றல் மிக்க அதிகாரங்கொண்ட ஓர் அரசியல் கட்சியாக ம.இ.கா செயல்பட்டால் இப்பிரச்சனை தீர்ந்துவிடும்.

 

ஆனால், ஆட்சியில் அமர்ந்துகொண்டு தேசியப் பதிவு இலாகாவின் அலுவலகத் தம்பிபோல் ..காவின்  அமைச்சர்களும், துணை அமைச்சர்களும் செயல் படுகிறார்கள் என்பதையே டத்தோ முனியாண்டியின் அறிக்கை அம்பலப்படுத்துகிறது.

 

அடையாளப்பத்திர விவகாரத்தில் சிக்கல்களுக்கு இந்தியர்களின் கல்வி, மலாய் மொழியாற்றல், வேலை, சௌகரியம், குடும்பச் சூழ்நிலை மற்றும் அறியாமை, மது போதைப் பித்தர் போன்ற பற்பல காரணங்கள் உண்டு. அவற்றை சமூக நோக்கில் பரிவுடன் பரிசீலிக்க வேண்டும்.

 

இஸ்லாமியர் அல்லாத திருமணச் சட்ட வரைவு அதாவது சட்டம் 164 அமல்படுத்தப்படுவதற்கு முன் ஒரு பிறப்பை எந்த (போலீஸ்) காவல் நிலையத்திலும் பதிவு செய்யலாம் என்று இருந்த நிலை இன்று உள்ளதா என்பதை மஇகா முதலில் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

 

மிக எளிய முறையில் ஒரு பிறப்பைப் பதிவு செய்ய முடியாததால் ஏற்படும் காலதாமதமும், காலஓட்டத்தைக் காரணமாகக் காட்டி, மேலும் அதிகப்படியான  ஆதாரங்களைக் கேட்டு தேசியப் பதிவு இலாகா கொடுக்கும் கெடுபிடிகளும் குழந்தைகளின் அடையாளப்பத்திரப் பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்குகிறதுஎன்பதையாவது மஇகா ஒப்பு கொள்ளுமா?

 

மற்றும் திருமணமான சில மாதங்களிலோ, நாட்களிலோ அதிகாரபூர்வமற்ற முறையில் திருமணமுறிவு ஏற்படும்பட்சத்தில் அல்லது கணவர் காணாமல் போகும் நிலை ஏற்படும் போது இளம் மனைவிக்கு அவரது கணவரின் அடையாள அட்டையின்றிக் குழந்தை பிறப்பைப் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் திருமணப் பதிவு சான்றிதழை ஏற்றுக்கொண்டு குழந்தைகளுக்கு அடையாளப்பத்திரம் வழங்கத் தேசியப் பதிவு இலாக்கா மறுக்கும் நோக்கம் என்ன?

 

இதைத் தவிர்த்து அடையாளப்பத்திரங்கள் இல்லாத ஒரு பிரிவு நம் சமுதாயத்தில்  உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட இருவர் மதச் சம்பிரதாயப்படி சேர்ந்து வாழ்வதால் பிறக்கும் குழந்தைகளுக்கும், அடையாளப்பத்திரம் இல்லாத ஒருவரை மணக்கும் ஒரு  பிரஜையின் குழந்தையின் நிலை என்ன? அதனை எப்படித் தீர்ப்பது?

 

இந்நாட்டில் பிறந்து 21 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தும் அவர்களுக்கு  அடையாளப்பத்திர பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றால் அது ஏன்,  எப்படி நடக்கிறது? அதனைத் தீர்க்க  அரசாங்கம் அல்லவா வழிதேட வேண்டும்!  இந்நாட்டில் பிறந்தவர்கள் அடையாளப்பத்திரம் இல்லாவிட்டால் 21 வயதைத் தாண்டிய பின்பும் திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்று கூறுவது அறிவுடைய செயலா?

 

இப்படிப் பற்பல பிரச்சனைகளில் இந்தியச் சமுதாயம் சிக்கித் திக்குமுக்காட அரசாங்கப் பணியாளர்களின் இன ஆதிக்கமும் அவர்களின் கரிசனமற்ற அணுகுமுறையும்கூட முக்கியக் காரணங்கள்தான் என்பதை டத்தோ முனியாண்டி ஏன் குறிப்பிடவில்லை. உங்களைப் போன்ற ஒரு குண்டுச்சட்டி மனப்பான்மை கொண்ட மனிதர், ம.இ.காவின் தேசியச் சேவை மையத்திற்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டால் அதனால் சமுதாயத்தின் பிரச்சனையை ஒருபோதும் தீர்க்க முடியாது என்பதைச் தயவு செய்து கவனத்தில் கொள்ளுங்கள்.

 

இன்று  இந்தியர்களின் அடையாளப்பத்திர விவகாரங்களுக்கு நீங்கள் பத்திரிக்கைகளில் கொடுத்துள்ள காரணங்கள் மட்டுமே காரணிகளா, அல்லது வேறு பல காரணங்களும்  உண்டா? அல்லது உங்கள் சேவை மையம் அது குறித்து அறிந்திருக்கவில்லையா? உங்கள் சேவை மையம் ஆக்ககரமாகச் செயல்பட்டிருந்தால் அது பற்றி முழுவதுமாக  அறிந்திருக்கும். ஆனால் நீங்கள்  உங்கள் கட்சித் தலைவர்களின்  இயலாமைக்கான ஒட்டுமொத்தப் பழியையும் சமுதாயத்தின் மேல் சுமத்தி அடுத்த தேர்தலுக்குக் கோல் போடும் வேலையைப் பார்க்கக் கூடாது.

 

நீங்கள் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்க வேண்டியது அடையாளப்பத்திர  விவகாரத்தில்  நடைப்பிணமாக நடமாடும் நம்மவர்களை அல்ல. வேறு ஒரு நாட்டில் பிறந்து அங்கேயே ஆரம்பக் கல்வியை முடித்து இடைநிலை கல்வியும் அங்குத் தொடர்ந்தவர் எப்படி, எப்போது இந்நாட்டில் நுழைந்தார். அப்படிப்பட்ட பல ஆயிரம் பேர் எப்படி இங்கே பூமிபுத்ரா சிறப்பு அந்தஸ்தைப் பெறுகின்றனர் என்பதை நீங்கள் பட்டியலிட வேண்டும்.

 

அப்படிப்பட்டவர்களை எப்படி அம்னோ உறுப்பினர்களாக ஏற்று கொண்டது? அவர்களை இங்கு அமைச்சர்களாக, மந்திரி புசார்களாக  ஏன் துணைப் பிரதமராகக்கூட ஆக்கி விட்டார்களே, அது தேசத்துரோகமாக உங்களுக்குத் தெரியவில்லையா என்று  உள்துறை அமைச்சரை, பிரதமரைச் சட்டையைப் பிடித்து உலுக்கி கேள்விகேட்க உங்களுக்குத் துணிவில்லை.

 

தமிழ்நாட்டு தமிழர்கள் சினிமா நடிகர்களிடம் ஏமாறுகிறார்கள் என்பதால், இந்நாட்டுத் தமிழர்களையும் நடிகர்களைக் கொண்டே ஏமாற்ற அம்னோவும் பிரதமரும் மனப்பால் குடிக்க வேண்டாம் என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

ஒவ்வொரு தேர்தலுக்கும் தமிழ்ப்பள்ளியைத் தூக்கிக்கொண்டு ஒரு சூத்திரதாரியையும் அடையாளப்பத்திர விவகாரத்தை எடுத்துக் கொண்டு ஒரு கோமாளியையும் சீட்-தீட், இந்தியஇளைஞர்கள்மிளகாய்ச் செடி நடுவதற்கு பயிற்சி என்ற கூப்பாட்டுடன் ஒரு கோணங்கியையும்  தேர்தல் காலத்தில் இறக்கிவிட்டு இந்தியர்களிடம் ”சீரியல்” காட்ட (நாடகமாட) அம்னோ தயங்குவதில்லை.

 

ஆனால் இம்முறை, இந்தியச் சமுதாயத்திடம் நாடகமாட அம்னோவைவிடச் சிறந்த நடிகனை ம.இ.கா தன் கைவசம் வைத்துள்ளது என்பதை நிருபிக்க டத்தோ முனியாண்டியை மஇகா களமிறக்கியுள்ளதாகத் தெரிகிறது.

இச்சமுதாயத்தின் மிக முக்கியமான விவகாரங்களில் ம.இ.கா கோமாளித்தனமான  அறிக்கைகளை விடாமல்  இருந்தால் அதுவே பெரிய  உபகாரமாக இருக்கும் என்றார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்