அமெரிக்க அதிபருக்கு மலேசியா எடுபிடிப் பையனா?, சாடுகிறார் எம்பி

 

Malaysiaerrandboyஏழு இஸ்லாமிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவுக்குச் செல்ல அதிபர் டிரம்ப் பயணத் தடை விதித்திருப்பது பற்றி நஜிப்பின் அரசாங்கம் மௌனம் சாதிப்பதால் அது அமெரிக்காவின் “எடுபிடிப் பையன்” என்று கூறப்பட்டிருக்கிறது.

“டிரம்புக்கு மலேசியா ஒரு எடுபிடிப் பையன் மட்டுமே, உலக அளவில் இஸ்லாமிய சமூகத்தின் நலன்கள் பற்றிய அக்கறை அவர்களுக்கு இல்லை … நஜிப்பையும் பிஎன்னையும் பாதுகாப்பது அவர்களுக்கு முக்கியம்”, என்று அமனா அனைத்துலகப் பிரிவின் தலைவர் ராஜா கமருல் பாரின் ஷா ராஜா அஹமட் இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

அமெரிக்கா பயணத் தடை விதித்து ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டது, ஆனால் மலேசியா மௌனமாக இருக்கிறது. இருந்தாலும், பிஎன் நிருவாகம் இஸ்லாத்தின் இலட்சியத்திற்காகப் போராடுவதாக கூறிக்கொள்கிறது.

கோலத் திரங்கானு நாடாளுமன்ற உறுப்பினரான ராஜா பாரின், பயணத் தடையைப் பற்றி பேசினால் அமெரிக்க நீதித்துறையின் 1எம்டிபி தொடர்பான வழக்குகள் கிளறப்படும் என்ற அச்சமா என்று அவர் வினவினார்.

ஆகவே, அவர்கள் அந்தப் பயணத் தடை பற்றி பேசாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறார்கள் என்றாரவர்.

“அவர்கள் இஸ்லாமிய சமூகத்தின் ஒற்றுமைக்காக செயல்படுகிறார்களா அல்லது நஜிப்பின் பாதுகாப்புக்காகவா?”, என்று ராஜா பாரின் வினவினார்.