“மலாய்க்காரர்களுக்கு உதவ” கிளந்தானையும் திரங்கானுவையும் கூட்டரசு பிரதேசமாக்குங்கள், கு நானுக்கு அறிவுரை

 

FTகிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களை கூட்டரசு பிரதேசங்களாக்கும்படி ஆலோசனை கூறுமாறு கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.

மலாய்க்காரர்களுக்கு உதவ பினாங்கை கூட்டரசு பிரதேசமாக்க வேண்டும் என்று அமைச்சர் தெங்கு அட்னான் தெரிவித்திருந்ததாக கூறப்படும் கருத்துக்கு மாறாக சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் இதைக் கூறினார்.

“தெங்கு அட்னானின் திட்டம் ‘மலாய்க்காரர்களுக்கு உதவுவது’ என்றால், அவர் தவறான மாநிலத்தைத் தேர்வு செய்துள்ளார்.

“மாறாக, அவர் (அரச குடும்பத்தினருடன் ஆலோசித்து) கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய இரு மாநிலங்களில் பொது வாக்கெடுப்பு நடத்தி அவற்றை கூட்டரசு பிரதேசங்களாக மாற்றி அவற்றை தெங்கு அட்னான் ஆட்சிக்குள்ளேயே வைத்துகொள்ளலாம்”, என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் லிப் எங் கூறினார்.

“இது ஏன் என்றால் அந்த இரு மலாய்-பெரும்பான்மை மாநிலங்கள்தான் நாட்டில் மிக ஏழ்மையானவை ஆகும்”, என்றாரவர்.

முதலில், கிளந்தானுக்கு கிடைக்க வேண்டிய எண்ணெய் பங்கு வீத உரிமைத் தொகையை மத்திய அரசிடமிருந்து பெற்றுக்கொடுக்க தெங்கு அட்னான் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த மாநிலம் அதன் வெகு விரிவான வெட்டுமர நடவடிக்கைகளை நிருத்த முடியும் என்று அந்த டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் அறிவுறுத்தினார்.

கடந்த வியாழக்கிழமை பிஎப்எம் 89.9 நேர்காணலில் பினாங்கு, லங்காவி மற்றும் மலாக்காவின் பகுதிகள் கூட்டரசு பிரதேசங்கள் ஆக்கப்பட வேண்டும் என்று தெங்கு அட்னான கூறியிருந்தார்.

இதனிடையே, புக்கிட் குலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் இன்று வெளியிட்ட இன்னொரு அறிக்கையில் அமைச்சர் தெங்கு அட்னானின் அறிக்கை அடிப்படையற்றது என்றும் பினாங்கில் மலாய்க்காரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நிருபிக்க திட்டவட்டமான ஆதரங்களை அளிக்கும்படி அமைச்சருக்கு சவால் விட்டுள்ளார்.