ஹமிடி, நாடற்ற இந்தியர்கள் விவகாரமும் ஒரு பிரச்சனைதான் என்பது உமக்குத் தெரியாதா?, கேட்கிறார் குலா

 

Zahid Hamidi-Negara0-kuஇரு நாட்களுக்கு முன்பு கூச்சிங்கில் துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி சரவாக்கில் சீன சமூகத்தினர் எதிர்கொண்டுள்ள குடியுரிமை விவகாரத்தைத் தீர்ப்பதற்கு ஒரு சிறப்பு பணிப் படை அமைக்கப்படும் என்று கூறினார்.

அந்தப் பணிப் படை தேசிய பதிவு இலாகவின் கீழ் செயல்படும் என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அது ஒரு சரியான நடவடிக்கைதான். அந்த அறிவிப்பிலிருந்து இரண்டு கேள்விகள் தோன்றுகின்றன என்று கூறுகிறார் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன்.

முதல் கேள்வி: ஏன் சரவாக்கிலுள்ள சீன சமூகத்தினருக்கு மட்டும்? நாடற்றவர் பிரச்சனை ஒரு தேசியப் பிரச்சனை இல்லையா? நாடற்ற இந்தியர்களின் விவகாரமும் ஒரு பிரச்சனை இல்லையா?. அது மிக அவசரமாக கையாளப்பட்டு தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

இரண்டாவது கேள்வி: நாடற்றவர்களாக வாழ்ந்து வருபவர்களின் அவலநிலையைத் தீர்ப்பதில் இந்த பணிப்படை எவ்வளவு ஆற்றலுடையதாக இருக்கும்?

ஹமிடி, உமக்கு இது தெரியுமா? பிரதமர்துறையின் கீழ் செயல்படும் சிறப்பு அமலாக்க பணிப்படை நாடற்ற இந்தியர்களின் பிரச்சனையைக் கையாண்டு வருகிறது. ஆனால், அதன் சாதணை பெரிய கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 7 இல், நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பு பிறந்த நாடற்ற இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்கு தேவையானவற்றை செய்யப் போவதாக பிரதமர் நஜிப் உறுதியளித்திருந்தார்.

மஇகாவின் 70 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பேசிய நஜிப், “நாட்டின் மேம்பாட்டிற்கு பங்களிப்புச் செய்த இந்தியர்களின் தியாகத்தை kulaமதித்துப் போற்றும் வகையில் நாம் இதைத் (குடியுரிமைப் பிரச்சனையை) தீர்ப்போம்”, என்று கூறியிருந்தார்.

இது வரையில் எத்தனை குடியுரிமைப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்று கேட்கிறார் குலா.

உண்மையில், நாடற்ற இந்தியர்களின் குடியுரிமைப் பிரச்சனையைத் தீர்ப்பதில் எவ்வித வளைந்துகொடுக்கும் போக்கிற்கும் இடமில்லை என்று கடந்த மாதம் ஹாடி கர்வத்துடன் பகிரங்கமாக கூறியிருக்கிறார் என்பதை குலா சுட்டிக்காட்டினார்.

குடியுரிமைக்கு மனு செய்பவர்களுக்கு சட்ட நுட்பக்கூறுகள் பெரும் தடங்கலாக இருக்கும் என்பது ஹாடிக்கு தெரிந்திருக்க வேண்டும் என்றாரவர்.

நாடற்ற மக்களின் நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு பொதுமன்னிப்பு திட்டம் தேவைப்படுகிறது என்பதை குலா வலியுறுத்தினார்.

கேள்வி இதுதான்: “நாடற்ற மக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான அரசியல் திண்மை பிஎன் அரசாங்கத்திற்கு உண்டா?”,என்று கேட்கிறார் குலா.