போட்டியிடுவதற்கான காரணத்தை விளக்கினார் ஸ்டார் வேட்பாளர்

starதஞ்சோங்    டத்துவில்   களமிறங்கும்       சரவாக்  சீரமைப்புக்   கட்சி  (ஸ்டார்)    வேட்பாளர்,   அங்கு   தோல்வியுறப்போவது   தெரியும்  ஆனாலும்   போட்டியிடுவது   அவசியம்    என்றார்.

போட்டியின்றி   அத்தொகுதியை   பிஎன்னுக்கு    விட்டுக்கொடுக்க   விரும்பவில்லை    என்று   ஜானி  போப்   கூறினார்.  போட்டி  இருந்தால்தான்  பிஎன்  மேலும்   பல  வாக்குறுதிகளை   வழங்கும்    அத்தொகுதியை    மேம்படுத்தும்   என்றாரவர்.

தம்  கட்சி   பிஎன்னுக்கு   எதிராக   களமிறங்குவது  “கம்பத்துக்  கால்பந்துக் குழு” ஒன்று   உலகப்  புகழ்பெற்ற  பார்சலோனா   குழுவை   எதிர்த்துப்   போட்டியிடுவதற்கு  ஒப்பாகும்    என்றவர்   சொன்னார்.

“ஸ்டார்  தேர்தல்  வைப்புத்தொகையை   இழப்பது   நிச்சயம்   என்று   தெரியும்,  ஆனால்,  இந்தத்   தியாகம்   தஞ்சோங்   டத்துவுக்கு    மேலும்   மேம்பாட்டைக்  கொண்டு   வரட்டும்,  அது  போதும்.

“பார்த்துக்   கொண்டே  இருங்கள்.  முதல்வர்,  சரவாக்   அமைச்சர்கள்,  கூட்டரசு   அமைச்சர்கள்,   ஏன்  பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கே  வாக்குகளைத்   தேடி   இங்கு  வருவார்கள்,   மேம்பாட்டுக்கான   புதுப்   புதுத்   திட்டங்களை    அறிவிப்பார்கள்.

“ஸ்டார்   போட்டியின்றி    பிஎன்  வெற்றிபெற    இடம்  கொடுக்காது.  கொடுத்தால்   தஞ்சோங்  டத்து   மக்களுக்குப்   புதிய   திட்டங்கள்   கிடைக்காது,  முன்னேற்றமும்   இருக்காது.  போட்டியிட்டால்   ஸ்டாருக்குத்   தோல்வி   நிச்சயம்.  ஆனால்,   இறுதி   வெற்றி  மக்களுக்குத்தான்”,  என்றாரவர்.