முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிம், செய்தியாளர் கூட்டத்துக்காக செய்திருந்த பதிவை அரச சிலாங்கூர் கிளப் இரத்துச் செய்ததாம். அக்கூட்டத்தில் ஜைட் டிஏபியில் சேரும் அவரது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் செய்தியாளர் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று ஜைட் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அவர் கடந்த வாரமே செய்தியாளர் கூட்டத்துக்குப் பதிவு செய்து விட்டாராம். ஆனால், நேற்று மாலை மணி 6க்குப் பதிவு இரத்தானதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாம்.
“அரச சிலாங்கூர் கிளப்பில் இடம் பதிவு செய்து கட்டணமும் செலுத்தி விட்டோம். அதன் பிறகு நேற்று ஒரு அழைப்பு வந்தது அனுமதிக்க முடியாது என்று. எங்கிருந்தோ அவர்களுக்கு உத்தரவு வந்ததாம்”, என்றாரவர்.
பார்டி பிரிபூமி பெர்சத்து (பெர்சத்து) அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட், டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் ஆகியோர் அக்கூட்டத்தில் கலந்துகொள்வதாக இருந்தது என்றாரவர்.
இதன் தொடர்பில் அரச சிலாங்கூர் கிளப்பின் மேலாளர்/ செயலாளர் ரமேஷ் மேனனைத் தொடர்பு கொண்டதற்குத் தம்மால் கருத்துச் சொல்ல இயலாது என்று கூறி விட்டார்.
அக்கிளப்பின் தலைவர் புவி மணியத்தையும் மலேசியாகினி தொடர்பு கொண்டது. அவரது மறுமொழி இன்னும் கிடைக்கவில்லை.