முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பிஎம்எப் அந்நிய செலாவணி முறைகேடுகளை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) அமைக்கப்படுவதை வரவேற்றார்.
“அதை (ஆர்சிஐ அமைக்கப்படுவதை) வரவேற்கிறோம். அதே வேளை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கணக்கில் காணப்பட்ட ரிம2.1 பில்லியன் குறித்தும் 1எம்டிபியில் நடந்ததைத் தெரிந்து கொள்ளவும் அதேபோன்ற விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறோம்”, என மகாதிர் இன்று பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
இப்போது தோழராக மாறியுள்ள அவரின் முன்னாள் எதிரி டிஏபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கும் அதே கருத்தை எதிரொலித்தார்.
“பிஎம்எப்மீதும் அந்நிய செலாவணி பரிவர்த்தனை தொடர்பில் பேங்க் நெகாராமீதும் ஆர்சிஐ தேவை என்று முன்பே கோரிக்கை விடுத்தேன். அதை இப்போதும் வலியுறுத்துகிறேன்.
“அதைவிட முக்கியம் 1எம்டிபி மீது விசாரணை நடத்துவது”, என லிம் கூறினார்.
1991-இல் நஜிப் தற்காப்பு அமைச்சராக இருந்தார். எனவே ஊழல் நிகழ்ந்திருக்குமானால் அதற்கு அவரும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றாரவர்.
அம்னோ, பாஸ் இளைஞர் அமைப்புகள் மகாதிர்-கால ஊழல்கள்மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விடுத்துள்ள கோரிக்கைக்கு எதிர்வினை ஆற்றியபோது அவ்விருவரும் மேற்கண்டவாறு கூறினர்.