அரசாங்கம் பூலாவ் பத்து பூத்தே உரிமையாளர் குறித்து அனைத்துலக நீதிமன்றம் (ஐசிஜே) அளித்த தீர்ப்பை மாற்றுவதற்காக முயற்சி மேற்கொண்டிருப்பது சரி, ஆனால் அதைத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்கிறது பார்டி அமனா நெகரா(அமனா).
“பூலாவ் பத்து பூத்தே மீது உரிமை கொண்டாடுவதைத் தேர்தல் பரப்புரையாக்கி அதன் மூலமாக 14வது பொதுத் தேர்தலில் மக்களின் மனத்தைக் கவரும் முயற்சி கூடாது”, என அமனா துணைத் தலைவர் சலாஹுடின் ஆயுப் கூறினார்.
அரசாங்கம் முன்பு நடந்த வழக்கில் சிங்கப்பூரிடம் கோட்டை விட்டது போல் மீண்டும் நிகழ்ந்து விடக்கூடாது.
“அரசாங்கம் எல்லாத் துறை வல்லுனர்களையும், குறிப்பாக வரலாற்றுத் துறை நிபுணர்களைத் தயார்படுத்தி வைத்திருக்க வேண்டும்”, என்றாரவர்.
“நான் காலஞ்சென்ற (வரலாற்றாசிரியர்) நிக் அனுவார் நிக் மக்முட்டை ஒரு முறை சந்தித்தேன். போதுமான அளவுக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளாததுதான் முன்பு நாம் தோல்வி கண்டதற்குக் காரணம் என்றார்”, என சலாஹுடின் கூறினார்.
மலேசியா, யுனைடெட் கிங்டம் அதன் ஆவணக் காப்பகத்திலிருந்து 2016 ஆகஸ்ட் 4க்கும் 2017 ஜனவரி 30-க்குமிடையில் வெளியிட்ட ஆவணங்களில் கிடைத்த ஆதாரங்களை வைத்து பூலாவ் பத்து பூத்தேமீது அனைத்துல நீதிமன்றம் 2008-இல் அளித்த தீர்ப்பை மாற்றம் செய்யக் கோரி மனு செய்து கொண்டுள்ளது.