மாரா தலைவர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள அனுவார் மூசா, இன்று மாரா கணக்குத் தணிக்கைக் குழுவிடம் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்பது தமக்குத் தெரியாது என்றார்.
“எனக்குத் தெரியாது. என்னை அழைக்கவுமில்லை, தெரிவிக்கவுமில்லை. மாராவிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்”, என்றார்.
அனுவார் இன்று மாரா கணக்குத் தணிக்கைக் குழுவின் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என மாரா இடைக்காலத் தலைவர் யூசுப் யாக்கூப் நேற்று கூறியிருந்தது குறித்து கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு சொன்னார்.
யூசுப்பைத் தொடர்புகொண்டு கேட்டதற்கு அனுவார் இப்போதைக்கு அழைக்கப்பட மாட்டார் என்றார்.
“அனுவார் இன்னும் அழைக்கப்படவில்லை. இது (மாரா கணக்குக்குழுவின்) முதல் கூட்டம்தான். இன்னும் எத்தனை கூட்டம் நடக்கும் என்று தெரியாது.
“எங்கள் வேலையைச் செய்ய விடுங்கள்…….எங்களுக்கு விளம்பரம் தேவையில்லை…….அனுவார் மூசா எப்போது அழைக்கப்படுவார் என்பது எனக்குத் தெரியாது. அது குழுவைப் பொறுத்தது”, என்றார்.
தாம் அக்குழுவில் இல்லை என்று சொன்ன யூசுப், அதில் யார்யார் இடம்பெற்றுள்ளனர் என்பதைத் தெரிவிக்க மறுத்தார்.