நேற்று காலையில் தடுப்புக்காவல் சிறையில் மரணமடைந்ததாகக் கூறப்படும் எஸ். பாலமுருகன் மரணம் குறித்து இஎஐசி (Enforcement Agency Integrity Commission)என்ற நிறுவனம் விசாரணை மேற்கொள்ளும்.
“இச்சம்பவத்தை இஎஐசி கடுமையானதாகக் கருதுகிறது. ஆகவே, இந்த விசாரணை வெளிப்படையாக, சுயேட்சையாக மற்றும் சார்பற்ற முறையில் நடத்தப்படும்”, என்று இஎஐசி தலைவர் யாக்கோப் முகமட் சாம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாலமுருகன், 44, நோர்த் கிள்ளான் மாவட்ட போலீஸ் நிலையத்தில் மூன்று நாள்களுக்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் நேற்று காலை மணி 6.00 க்கு இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
பாலமுருகனின் உடம்பை தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் அடையாளம் காட்டிய அவரது குடும்பத்தினர், அவரது முகத்தில் காய்ந்த இரத்தம் இருந்தாகக் கூறினர்.
கடந்த செவ்வாய்க்கிழமை பாலமுருகனை மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த போது அவரது முகத்திலிருந்து இரத்தம் கொட்டியதோடு இரத்த வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
பாலமுருகனை விடுவிக்க வேண்டும் அல்லது மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று மஜிஸ்திரேட் நீதிபதி உத்தரவிட்டும், போலீசார் அவரைத் தொடர்ந்து அதே போலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர். அங்கே அவர் அடுத்த நாள் மரணமடைந்தார்.
பின்னர், அவர் மாரடைப்பால் இறந்திருக்கக்கூடும் என்று மருத்துவரிடமிருந்து குடும்பத்தினர் தெரிந்துகொண்டனர். பாலமுருகனின் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து விட்ட குடும்பத்தினர் இரண்டாவது பிரேதப் பரிசோதனை வேண்டும் எனக் கோரினர்.
இன்று முன்னேரத்தில், பாலமுருகனின் குடும்பத்தினர் இரண்டாவது பிரதேப் பரிசோதனை வேண்டும் என்றும் அவரின் மரணம் குறித்து உடனடியாகப் போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரும் போலீஸ் புகார் ஒன்றைச் செய்தனர்.
பாலமுருகனின் வழக்குரைஞர் ஜெராட் லஸாரஸும் இவ்விவகாரம் குறித்து ஒரு போலீஸ் புகார் செய்துள்ளார்.
பணிப்படை அமைக்கப்பட்டது
இதனிடையே, இஎஐசி பாலமுருகனின் மரணம் குறித்து விசாரிக்க ஒரு பணிப்படையை அமைத்துள்ளது.