ஹமிடி: தைப்பூசத் திருவிழா சுற்றுப்பயண வளர்ச்சித்திட்டத்தின் ஒரு பொருளாக ஊக்குவிக்கப்பட வேண்டும்

 

Thaipusammessagebyhamidiதுணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று பத்துமலையில் தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொண்டு பேசுகையில் அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கு, குறிப்பாக இந்தியச் சுற்றுப்பயணிகளையும் உலகம் முழுவதிலுமுள்ள இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்களையும், இந்நாட்டில் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா ஒரு சுற்றுப்பயணத் திட்டத்தின் பொருளாக ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

தைப்பூசம் மதிக்கப்பட வேண்டிய ஒரு கொண்டாட்டம் மட்டுமல்ல என்று கூறிய ஹமிடி, அது இந்த ஆண்டில் 1.5 மில்லியன் இந்து பக்தர்களையும் சுற்றுப்பயணிகளையும் பத்துமலைக் கோயிலுக்கு கொண்டுவந்துள்ளது என்றார்.

இன்று இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை உலகம் முழுவதற்கும் பரப்புவதற்கான நடவடிக்கைகளை சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சு எடுக்கும் என்று தாம் நம்புவதாக ஹமிடி மேலும் கூறினார்.

நமது நாடு பன்மைச் சமுதாய அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டது; இந்தப் பல்வகைமை வலுப்படுத்தப்பட்டாக வேண்டும் என்று தமது தொடக்க உரையில் கூறிய துணைப் பிரதமர், சமயங்களில் காணப்படும் வேறுபாடுகள் எந்த விதமான அமைதியின்மைக்கும் இட்டுச்செல்லக்கூடாது என்றார்.

வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள்

வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்திய குடிமக்கள் மலேசியாவுக்கு வருகையளிப்பதற்கு ஏதுவாக விசா விலக்கு வழங்க அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது என்று ஹமிடி அறிவித்தார்.

இந்த விசா விலக்கு முடிவு அளிக்கும் வாய்ப்பால் காட்டாரில் வேலை செய்யும் 500,000 இந்தியக் குடிமக்கள் பலனடைவர் என்றாரவர்.

பத்துமலைக்கு அதிகமான வருகையாளர்கள் வருவதை உறுதிசெய்யும் பொறுப்பு சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சை மட்டும் சார்ந்தல்ல. இதில் அனைவரும் சம்பந்தப்பட்டுள்ளனர், பத்துமலைக் கோயில் நிருவாகம் உட்பட, என்று துணைப் பிரதமர் மேலும் கூறினார்.

இங்கு வந்திருந்த அனைவரும் தைப்பூசக் கொண்டாட்டத்தை ஒரு “டூரிசம் புரடக்” ஆக ஊக்கவிக்க உதவ முடியும் என்றும் அவர் கூறினார்.

பத்துமலைக்கு துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடியின் வருகையின் போது மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம், செனட் தலைவர் எஸ்எ விக்னேஸ்வரன், துணை அமைச்சர் எஸ்கே தேவமணி மற்றும் துணைக் கல்வி அமைச்சர் பி. கமலநாதன் ஆகியோரும் உடனிருந்தனர்.