‘கிள்ளான் தடுப்புக் காவல் மரணம் ஒரு கொலை என வகைப்படுத்தப்பட வேண்டும்’

balaதடுப்புக்   காவலில்   இருந்தபோது   உயிரிழந்த   எஸ்.பாலமுருகன்     குடும்பத்தாரின்    வழக்குரைஞர்கள்   அந்த   இறப்பு   மீதான விசாரணை   விரைவாகவும்   சுதந்திரமாகவும்  நடைபெற   அது      ஒரு  கொலையாக      வகைப்படுத்தப்பட   வேண்டும்    என்கிறார்கள்.

பாலமுருகன்   வட   கிள்ளான்   போலீஸ்   நிலையத்தில்   இறந்து   நான்கு   நாள்கள்   கடந்து   விட்டன.  அதன்    தொடர்பில்    இதுவரை    ஒரு   போலீஸ்காரர்கூட   கைது    செய்யப்படவில்லை,   இடைநீக்கம்கூட    செய்யப்படவில்லை    என்று    என். சுரேந்திரனும்   லத்தீபா   கோயாவும்   இன்று   ஓர்   அறிக்கையில்     தெரிவித்தனர்.

அந்த  இறப்பை   ஒரு  கொலை    என்று  நினைப்பதற்குப்    போதுமான   ஆதாரங்கள்   உள்ளதாக    அவ்விருவரும்    கூறினர்.

“காயங்கள்   உள்பட    எல்லாவற்றையும்    சீர்தூக்கி    ஆராய்ந்தால்,  போலீசார்   அவ்விவகாரத்தை   ஒரு  கொலையாக   வகைப்படுத்தி   விசாரிக்க   வேண்டும்   என்பதுதான்   எங்களின்    கருத்தாகும்”.

இறந்தவர்   உடலில்    காயங்கள்   இருந்ததை    அவரின்   குடும்பத்தார்   போலீசில்   புகார்   செய்துள்ளனர்.    சவப்   பரிசோதனை     செய்த   மருத்துவரும்   அதை    உறுதிப்படுத்தியுள்ளார்.

“வழக்குரைஞர்   ஜெரார்ட்    லாசரசும்    பாலமுருகன்    தாக்கப்பட்டார்    என்ற   தகவல்   தம்மிடம்    இருப்பதாக     போலீசில்   புகார்    செய்துள்ளார்.

“நான்கு   நாள்   ஆகி   விட்டன.  பாலமுருகன்    மரணம்   தொடர்பில்   ஒரு   போலீஸ்காரர்கூட   கைது    செய்யப்படவில்லை,   பதவி   இடைநீக்கம்கூட     செய்யப்படவில்லை.

“அவரது   இறப்புடன்   சம்பந்தப்பட்ட     அதிகாரிகள்    குறைந்த   பட்சம்   விசாரணை   முடியும்வரை    இடைநீக்கம்     செய்யப்பட்டிருக்க    வேண்டும்.  அதை   இன்னும்   செய்யாதது   ஏன்?”,  என்றவர்கள்   வினவினர்.