பெல்டா ரிம4.3 பில்லியனை இழக்கவில்லை என்று ஷரீர் இப்போது கூறுகிறார்

 

feldaமுன்பு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது போல் பெல்டா ரிம4.3 பில்லியனை இழக்கவில்லை என்று பெல்டா தலைவர் ஷரீர் அப்துல் சமாட் இன்று விளக்கம் அளித்தார்.

ஜோகூர்பாரு நாடாளுமன்ற உறுப்பினரான ஷரீர் அந்த ரிம4.3 பில்லியன் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதற்கான பட்டியல் தம்மிடம் இருப்பதாக கூறினார்.

பல செய்தித்தளங்கள் எஃப்ஜிவிஎச் (FGVH) பங்குச் சந்தையில் பதிவுப் பெற்ற பின்னர் பெல்டாவுக்கு கிடைத்த ரிம6 பில்லியனுக்கு கணக்குக் காட்டப்படவில்லை என்று செய்தி வெளியிட்டிருந்தது பற்றி கருத்துரைக்கையில் இவ்வாறு கூறினார்.

“பண இழப்பு இல்லை. கிடைக்கப் பெற்ற ரிம6 பில்லியனிலிருந்து ரிம1.7 பில்லியனை பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ரிம15,000 என்ற அடிப்படையில் கொடுத்தோம்.

“மிச்சமிருந்த ரிம4.3 மில்லியனை பல காரணங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. ஒருமுறை மட்டும் வழங்கப்படும் நிதியாக சாபா அரசுக்கு ரிம300 மில்லியன், பகாங் அரசுக்கு ரிம250 மில்லியன், பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு வீட்டுக் கடன் உதவி ரிம400 மில்லியன், நிருவாகச் செலவு ரிம883 மில்லியன் ஆகியவற்றோடு இங்கும் வெளிநாட்டிலும் சொத்துக்களில் முதலீடு மற்றும் பங்குகள் வாங்குவதற்கு மற்றும் இன்னும் பலவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டது”, என்று ஷரீர் கூறினார்.

பெல்டாவினால் முதலீடு செய்யப்படும் பணம் திட்டத்திற்கேற்ப இருப்பதையும் முதலீடுகள் சிறந்த இலாபத்தைக் கொண்டுவருவதையும் உறுதிசெய்வது தமது வேலை என்று ஷரீர் மேலும் கூறினார்.