கொலையாளிகளை ஏற்றிச் சென்ற டாக்சி ஓட்டுனர் பிடிபட்டார்

arrestவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்-னின்   ஒன்றுவிட்ட    சகோதரர் கிம் ஜோங் நாமைக்  கொலை   செய்தவர்கள்   என்று    சந்தேகிக்கப்படும்    இரு  பெண்களை   ஏற்றிச்சென்ற   டெக்சி   ஓட்டுனரை    போலீஸ்   பிடித்துள்ளதாக    ஓரியெண்டல்   டெய்லி   செய்தி   வெளியிட்டுள்ளது.

மூத்த   போலீஸ்   அதிகாரி   ஒருவரை   மேற்கோள்காட்டி    செய்தி   வெளியிட்டிருக்கும்   ஓரியெண்டல்   டெய்லி,   அப்பெண்கள்   இருவரும்      சம்பவம்      நடந்து   முடிந்த      பின்னர்   கோலாலும்பூர்   அனைத்துலக    விமான   நிலைய(கேஎல்ஐஏ) த்தின்   டெக்சி   நிறுத்தத்தை    நோக்கிச்  செல்வதைக்  கண்காணிப்பு   கேமிராக்கள்   காண்பிப்பதாக    தெரிவித்தது.

இருவரும்   டெக்சி   ஏறியதையும்   அது   காண்பித்தது.

“சிசிடிவி   கேமிரா   படத்தை   வைத்து    போலீஸ்   டெக்சி   ஓட்டுனரைப்  பிடித்தது”,  எனத்   தகவலளித்த   வட்டாரம்    தெரிவித்தது.

அப்பெண்கள்    தாங்களிருவரும்    வியட்நாமியர்கள்   என்று    டெக்சி   ஓட்டுனரிடம்    தெரிவித்தார்களாம்.

அவ்விருவரும்    எப்படி    கிம்மை   கொன்றார்கள்   என்பதையும்   போலீஸ்   வட்டாரம்    விவரித்திருக்கிறது.

“கிம்  புறப்பாட்டு   மண்டபத்தை    நோக்கிச்    செல்ல   முயன்றபோது   இருவரும்   அவரை   நெருங்கினார்கள்.

“ஒருவர்   விஷத்தை   அவர்மீது  பீய்ச்சி(ஸ்ப்ரே)   அடித்தார்.  மற்றொருவர்   ஒரு  கைக்குட்டையால்   கிம்மின்   முகத்தை    10  வினாடிகளுக்கு   அழுத்தி   மூடிக்கொண்டார்”,  என்று   அந்த   போலீஸ்  வட்டாரம்   தெரிவித்தது.

அவர்கள்    பயன்படுத்திய   விஷம்   என்னவென்பதை    அந்த   வட்டாரம்   தெரிவிக்கவில்லை,    ஆனால்,  “அது  சயனட்டைவிட    ஆற்றல்மிக்கது”   என்று  மட்டும்   குறிப்பிட்டது.

இதனிடையே,  கேஎல்ஐஏ  சிசிடிவி    கேமிராவில்   பதிவான   ஒரு  பெண்ணின்    படத்தை    தென்  கொரியாவின்    24-மணிநேர    செய்தித்  தொலைக்காட்சியான  ஒய்டிஎன்   வெளியிட்டிருந்தது.
அதே  படம்   இன்றைய   மலாய்  மெயிலிலும்   வெளிவந்துள்ளது.