மலேசியாவில் போலீஸ் லாக்கப் மரணம் ஒரு தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த ஜனவரி 15 இல், சோ கை சியோக் என்ற லாக்கப் கைதி மரணமடைந்தார்.
பெரா மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி மான்சூர் சம்சுடீன் லாக்கப் கைதிக்கு அளிக்க வேண்டிய அனைத்து லாக்கப் நடைமுறைகளும் சோவுக்கு அளிக்கப்பட்டது என்று கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய குலா, அப்படி என்றால் ஏன் சோ லாக்கப்பில் நினைவிழந்து இறந்தார் என்ற கேள்வியை எழுப்பினார்.
கடந்த மாதம், உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். நந்தபாலன் அவரது 86 பக்கத் தீர்ப்பில் லோரி ஓட்டுனர் பி. சந்திரன் 2012 ஆம் ஆண்டில் லாக்கப்பில் இறந்ததற்கு காரணம் போலீசார் லாக்கப் விதிகள் 1953ஐ பின்பற்றாததுதான் என்று கூறியிருந்ததை குலா நினைவுகூர்ந்தார்.
பெப்ரவரி 6, 2017 இல், போலீசார் 44 வயதான எஸ். பாலமுருகனை கைது செய்து அடுத்த நாள் ரிமாண்ட் உத்தரவு பெற நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்தனர். ரிமாண்ட் மறுக்கப்பட்டது. போலீசார் பாலமுருகனை விடுவிக்கவில்லை. அடுத்த நாள் பெப்ரவரி 8 அதிகாலையில் நோர்த் கிள்ளான் போலீஸ் தலைமையகத்தில் பாலமுருகன் இறந்து கிடந்தார்.
மலேசிய மனித உரிமைகள் ஆணையம் பாலமுருகனுக்கு மருத்துவ உதவிகள் அளிக்காமல் லாக்கப்பில் வைத்திருந்தது லாக்கப் விதி முறைகளைப் போலீசார் மீறியதாகும் என்றும் அது குறித்து ஆணையம் அதன் ஆதங்கத்தையும் தெரிவித்துள்ளது என்றார் குலா.
சுஹாகாம் அளித்துள்ள தகவல்படி 2000 ஆண்டிலிருந்து 242 பேர் லாக்காப்புக்குள் உயிருடன் சென்று பிணமாக வெளியே வந்துள்ளனர். எஸ். பாலமுருகன் 243வது நபராகும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகுவை மேற்கோள் காட்டி குலா கூறினார்.
இது மிக அதிர்ச்சி அளிப்பதோடு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஆனால், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டிய உள்துறை அமைச்சரும் அமைச்சரவையும் “நளினமான மௌனம்” காத்து வருகின்றனர் என்று குலா சாடினார்.
லாக்கப் மரணங்களை ஒரு பொறுப்புமிக்க அமைச்சரவை சாதாரண விவகாரமாகக் கருதக்கூடாது என்று குலா வலியுறுத்தினார்.
இந்தக் கிரிமினல் லாக்கப் மரணங்களை நிறுத்துவதற்கான எதிர்நடவடிக்கைகளை அமைச்சரவை மிக அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்றாரவர்.
சுயேட்சையான போலீஸ் புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையம் (IPCMC) உடனடியாக அமைக்கப்பது பற்றிய விவகாரத்தை மார்ச் 6 இல் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாம் எழுப்பவிருப்பதாக குலா தெரிவித்தார்.
ஐயா குலா அவர்களே- இதைப்பற்றி இந்த நாதாரிகளுக்கு என்ன வேர்த்தா வடியுது? எவனுக்கு என்ன ஆனால் என்ன எவன் செத்தால் என்ன? ஆட்சியில் இருக்கும் எவனுக்கு சமூக நீதி பற்றி அக்கறை?