கிம் ஜோங்-நாம் கொலை விவகாரத்தில் புத்ரா ஜெயா எதையோ மூடிமறைப்பதாகக் குற்றஞ்சாட்டிய வட கொரியா தூதர் காங் சோலை விளக்கம் கேட்பதற்காக விஸ்மா புத்ரா அழைத்துள்ளது.
அதே வேளை வட கொரியாவுக்கான மலேசியத் தூதரையும் ஆலோசனை கலப்பதற்காக கோலாலும்பூருக்குத் திரும்ப அழைத்துக் கொண்டிருப்பதாக விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
“தூதர் கொரிய குடிமகன் மரணம் தொடர்பில் மலேசிய அரசாங்கம் ‘எதையோ மறைக்கிறது’ என்று மறைமுகமாகக் குற்றஞ் சாட்டியிருக்கிறார்.
“இறப்பு மலேசிய மண்ணில் மர்மமான சூழலில் நிகழ்ந்திருப்பதால் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்வது மலேசிய அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை அமைச்சு ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது. மலேசிய சட்டப்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“இந்நிலையில், அடிப்படையின்றி மலேசியாவைக் களங்கப்படும் முயற்சிகளை மலேசிய அரசாங்கம் கடுமையாகக் கருதுகிறது”, என வெளியுறவு அமைச்சு கூறியது.
கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் விஷ திரவம் பயன்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட ஜோங்-நாம் வட கொரிய தலைவர் கிம் ஜோங்- உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் என்று நம்பப்படுகிறது.
அக்கொலை விவகாரத்தில் மலேசியா “எதிர்ப்புச் சக்திகளுடன்” சேர்ந்து சூழ்ச்சி செய்வதாக காங் குற்றஞ்சாட்டியது அரசதந்திர ரீதியில் பதற்றத்தை உண்டுபண்ணியுள்ளது.
வட கொரியாவின் அனுமதி கேட்காமல் சவப் பரிசோதனை செய்யப்பட்டது தூதருக்குப் பிடிக்கவில்லை.