சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷரிபுடின் இட்ரிஸ் ஷா, பள்ளிவாசல் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிணப் பெட்டிகளைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பெயர்களோ நிகழ்வுகளோ குறிப்பிடப்படாவிட்டாலும் பிப்ரவரி 14-இல், ஷா ஆலமில் சிலாங்கூர் செயலகக் கட்டிடத்தின் முன்புறம் சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்தே சுல்தான் அவ்வாறு கூறினார் என்பது தெளிவு.
சுல்தானின் உத்தரவை சுல்தானின் தனிச் செயலர் லேலா பக்தி பள்ளிவாசல் குழுக்களுக்கு அனுப்பி வைத்த கடிதம் தெளிவாக உணர்த்தியது.
“சுல்தான் பிணப்பெட்டிகள் தவறாகப் பயன்படுத்துவதை ஏற்கவில்லை. பிணங்களைக் கொண்டு செல்ல மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும். ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் வேறு காரணங்களுக்காகவும் அவற்றை வாடகைக்கு விடுதல் கூடாது.
“அப்படிச் செய்வது முஸ்லிம்கள் பிணப்பெட்டிகளைக் கேலி செய்வதுபோல் ஆகிவிடும் . அது கூடாது”, என்று அக்கடிதம் வலியுறுத்தியது.
பிப்ரவரி 14 ஆர்ப்பாட்டத்தில் புதைகுழி பராமரிப்பாளர் போல் வேடமிட்டிருந்த ஜமால் 15 பிணப் பெட்டிகளை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தார்.
சிலாங்கூர் மாநிலத்தில் மூத்த குடிமக்களுக்கும் ஈமச் சடங்குகளுக்கும் உதவும் திட்டங்களில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறி அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே ஆர்ப்பட்டம் செய்வதாகவும் அவர் கூறிக் கொண்டார்.