ஃபோரெக்ஸ் புலனாய்வு: புத்ரா ஜெயா உண்மையில் அக்கறை கொண்டிருந்தால் நோர் யாக்கூப்பை விலக்க வேண்டும்- கிட் சியாங்

lim kitபுத்ரா   ஜெயாவுக்கு   1990களில்   பேங்க்   நெகராவுக்கு   ஏற்பட்ட    அன்னிய   நாணயச்   செலவாணி   இழப்பு   குறித்து   புலனாய்வு    செய்வதில்     உண்மையிலேயே    அக்கறை  இருந்தால்,   அது    தேசிய   கஜானா    துணைத்    தலைவர்   நோர்   முகம்மட்  யாக்கூப்பைப்    பணிநீக்கம்    செய்ய   வேண்டும்    அல்லது    இடைநீக்கமாவது  செய்ய     வேண்டும்    என்கிறார்   லிம்   கிட்  சியாங்.

பேங்க்  நெகரா   அன்னிய   செலாவணி   ஊக   வணிகத்தில்   ஈடுபட்டபோது   அதில்   முக்கிய    புள்ளியாக   இருதவர்    நோர்  முகம்மட்    என்று   கூறிய   கிட்  சியாங்,   அந்த  ஊக   வணிகத்தில்   சுமார்   ரிம30பில்லியன்வரை   சம்பந்தப்பட்டிருந்தது    என்றார்.

பேங்க்  நெகராவுக்கு   இழப்பு    ஏற்பட்ட     அக்காலக்   கட்டத்தில்   நிதி  அமைச்சராக   இருந்து   இப்போது   சிறைத்தண்டனை  அனுபவிக்கும்   பிகேஆர்    நடப்பில்    தலைவர்    அன்வார்   இப்ராகிமும்     அவ்விவகாரத்தில்   நோர்  யாக்கூப்புக்கும்     தொடர்புண்டு   என  நேற்று   கூறியிருந்தார்.

“20  ஆண்டுகளுக்குமேல்   ஆகிவிட்டன. 1990-களின்   தொடக்கத்தில்   பேங்க்   நெகராவின்   அன்னிய      செலாவணி   ஊக   வணிக    நடவடிக்கைகளுக்குத்   தலைமை   ஏற்று   நடத்தி    பேங்க்  நெகாராவின்   பேரிழப்புக்குப்   பொறுப்பாளியான    நோர்   யாக்கூப்,   அமைச்சரவை    சிறப்புப்   பணிக்குழுவுக்கு   மட்டுமல்லாமல்    நாட்டுக்கும்    மக்களுக்கும்   விளக்கமளிக்கக்  கடமைப்பட்டிருக்கிறார்”,  என  லிம்   கூறினார்.

நோர்  யாக்கூப்   1994வரை   மூன்று   பத்தாண்டுகளுக்கு   பேங்க்   நெகாராவில்    பணியாற்றினார்.  1998-இல்    அவர்  மீண்டும்   பேங்க்   நெகாராவில்    சேர்ந்தார். 2000ஆம்   ஆண்டில்      நிதி  அமைச்சரானார்.