வட கொரிய அதிபர் கிம் ஜொங்-உன்னின் சகோதரர் கிம் ஜொங்-நாம் கொலையில் விஷத்தன்மைமிக்க வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதை மலேசிய போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
மலேசிய வேதியியல் துறையின் தொடக்கநிலை ஆய்வுகளின்படி s-2-diisopropylaminoethyl methylphosphonothiolate எனப்படும் வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது என இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் தெரிவித்தார். அது சுருக்கமாக விஎக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
2005 வேதியியல் ஆயுதச் சட்டம், 1997 வேதியியல் சட்டம் ஆகியவற்றின்கீழ் விஎக்ஸ் ஒரு வேதியியல் ஆயுதம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காலிட் தெரிவித்தார்.
விஎக்ஸ் கேஸ் போன்ற ஒன்று ஜொங்-நாம் கொலையில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று வேதியியல் ஆயுத நிபுணர் ஒருவர் தெரிவித்ததாக ஜப்பானிய ஒளிபரப்புக் கழகமான என்எச்கே கடந்த வாரமே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.