இன்று ரிபோமாஸி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் பிரதமர் மகாதிரை நோக்கி கூச்சலிட்ட கூட்டத்தினரிடம் அவர் முதலில் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நாம் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். அதன் பின்னர் தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறினார்.
“நஜிப் அப்துல் ரசாக்கை நிரந்தரமாக வெளியேற்றுவதற்கு நாம் ஒன்றுபட்டு போராட முடியுமா? அதுதான் முக்கியமானது.
“அதற்குப் பிறகு, (நீங்கள்) விரும்பினால் எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம், செய்யுங்கள்”, என்று ஷா அலாமில் இன்று நடைபெற்ற கொன்வென்சன் ரிபோமாஸியில் மகாதிர் கூறினார்.
அக்கூட்டத்தில் இருந்த, பெரும்பாலும் 1998 ரிபோமாஸி இயக்கத்தின் ஆதரவாளர்கள், சுமார் 300 பேர் மகாதிர் கூறியதை ஏற்றுக்கொண்டு அமைதியடைந்தனர். ஒருவர் உரத்த குரலில் “நான் உமக்கு தலைவணங்குகிறேன்”, என்று கூறினார்.
அடுத்து வரும் பொதுத் தேர்தலில் நஜிப்பையும் அவரது அரசாங்கத்தையும் வெளியேற்றுவதுதான் மிக முக்கிய போராட்டம். அதில் கவனம் செலுத்த வேண்டும். சொந்த கருத்துகளையும் உணர்வுகளையும் ஒதுக்கிவைத்துவிட வேண்டும் என்று மகாதிர் அக்கூட்டத்தினரிடம் கூறினார்.
சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு, முதலில் அவர்கள் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்றாரவர்.
நமக்கு உண்மையிலேயே ரிபோமாஸி வேண்டுமென்றால், முதலில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று மகாதிர் வலியுறுத்தினார்.