தமது ஒரு மாத கால ஆசிய வருகையின் ஒரு பகுதியாக அரேபிய மன்னர் சால்மன் இன்று மலேசியா வந்து சேர்ந்தார்.
தமது நாட்டில் முதலீடு செய்வதற்காக ஆசிய முதலீட்டாளர்களைக் கவரும் நோக்கத்தில் அரேபிய மன்னர் இந்த ஆசிய வருகையை மேற்கொண்டுள்ளார்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் மலேசியாவுக்கு வருகையளித்துள்ள முதல் அரேபிய மன்னர் சால்மன் ஆவார்.
மன்னர் சால்மனை விமானநிலையத்தில் பிரதமர் நஜிப் ரசாக் வரவேற்றார். மன்னருடன் 600 பேர் அடங்கிய குழுவினர் வந்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் நேராக நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நாடாளுமன்ற சதுக்கத்தில் மன்னர் சால்மனுக்கு சம்பரதாயப்பூர்வமான மரியாதை வழங்கப்பட்டது.
நான்கு நாள்களுக்கு மலேசியாவில் தங்கியிருக்கும் மன்னர் சால்மனும் அவரது குழுவினரும் எரிபொருள் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து விவாதிப்பதுடன் மலேசியாவின் பெட்ரோனாஸ் மற்றும் சவூதி அரேபியாவின் சவூதி அராம்கோ ஆகியவற்றுக்கிடையில் வரும் செவ்வாய்க்கிழமை ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சவூதி அரேபியா மற்றும் மலேசியா ஆகியவற்றுக்கிடையிலான உறவுகளில் கவனத்தை ஈர்த்தது 1எம்டிபி விவகாரத்தில் சவூதி அரேபியாவின் பங்கு பற்றியதாகும்.
மலேசிய வருகையை முடித்துக் கொண்டதும் அரேபிய மன்னர் இந்தோனேசியாவின் ஜாக்கர்த்தாவுக்கும் பாலிக்கும் மார்ச் 1-9 வரையில் வருகை அளிக்கிறார். அவருடன் 1,500 பேர் செல்லவிருக்கின்றனர்.