சவூதியுடன் ஒப்பிடாதீர்கள், அவர்கள் மலேசியர்களைவிட அதிகம் வருமானம் பெறுகிறார்கள்: நஜிப்புக்கு எம்பி மறுமொழி

amanah பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   மலேசிய,  சவூதி   அராபிய   எண்ணெய்  விலைகளை  ஒப்பிட்டுப்  பேசியிருப்பது    அவர்    விசயம்   தெரியாமல்   பேசுகிறார்   என்பதைக்  காண்பிப்பதாக    பார்டி   அமனா   நெகாரா(அமனா)   எம்பி   ராஜா   கமருல்  பாஹ்ரின்   ஷா   அஹ்மட்  கூறினார்.

சவூதியில்    எண்ணெய்  விலை    50  விழுக்காடு   உயர்த்தப்பட்டபோது   மலேசியாவில்   20சென்  அல்லது   10  விழுக்காடுதான்  உயர்த்தப்பட்டது     என்று   நஜிப்  பெருமைப்பட்டுக்  கொண்டார்   என்று  ராஜா  கமருல்  ஓர்   அறிக்கையில்
கூறினார்.

“ஆனால்,  சவூதி  மக்கள்  செல்வத்தில்   திளைப்பதை,  அவர்களில்  பலர்  அமெரிக்காவில்   உருவாக்கப்பட்ட   4,000 cc  கார்கள்   வைத்திருப்பதை   நஜிப்   அறிவாரா?

“நம்மைப்  போல்   அவர்கள்  வருமான  வரி  கட்டுவதில்லை,   அவர்களின்   கார்களுக்கும்   வரியில்லை.  அவர்களின்   சம்பளம்   இங்குள்ளதைக்  காட்டிலும்  பன்மடங்கு   அதிகம்.  நம்மால்   குறைந்த பட்ச   சம்பளத்தைக்கூட   முறையாக  அமல்படுத்த  முடியவில்லை”,  என்று  அவரது   அறிக்கை  குறிப்பிட்டது.

ரோன் 95-இன்  விலை  அண்மையில்  ரிம2.20ஆக   உயர்த்தப்பட்டதை    சவூதி   அராபியாவில்   எண்ணெய்  விலை   50விழுக்காடு   உயர்த்தப்பட்டதுடன்   ஒப்பிட்டுப்  பேசிய   நஜிப்   சவூதியில்   ரோன்95-இன்  விலை  லிட்டருக்கு  ரிம1.07   அதாவது    மலேசிய    எண்ணெய்  விலையில்   பாதியைவிட  குறைவு    என்பதைக்  குறிப்பிட  மறந்து   விட்டார்   என்றும்   ராஜா  கமருல்   குறிப்பிட்டார்.