புதிய தேசிய ஆடிட்டர் ஜெனரல் ஓர் “அம்னோ உறுப்பினர்”

yrsayauditdepartmentபுதிதாக நியமிக்கப்படுள்ள தேசிய கணக்காய்வாளர் மதினா முகமட் ஓர் அம்னோ உறுப்பினர் என்று கூறப்படுகிறது.

தேசிய கணக்காய்வாளர் தமது கடமையை ஆற்றுவதில் பாரபட்சமற்றவராக இருக்க வேண்டும் என்பதால் மதினா இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிகேஆர் தொடர்புத்துறை இயக்குனர் ஃபாமி ஃபாட்ஸில் கூறினார்.

இது உண்மையானால், மதினாவை தேசிய கணக்காய்வாளராக நியமிக்கும்படி பிரதமர் நஜிப் பேரரசருக்கு கூறிய ஆலோசனை மலேசியாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு உதவவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

மக்களின் பார்வையில் ஒரு தேசிய கணக்காய்வாளர் சுயேட்சையான, நடுநிலைமை வழுவாத, கட்சி சார்பற்றவராக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அவர் அப்பேற்பட்டவராக காணப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மலேசியாகினி அம்னோ தலைமையகத்துடன் மேற்கொண்ட சரிபார்ப்பில் மதினா அம்னோ கெப்போங் தொகுதி உறுப்பினர் என்பது தெரிய வந்தது. அத்தொகுதியின் தலைவர் அவரது கணவர் ரிஸுவான் அப்துல் ஹமிட்.

மதினாவின் நேர்மையைத் தற்காத்து பேசிய அம்னோ வனிதா தலைவர் ஷாரிஸாட் அப்துல் ஜாலில் அதே கெப்போங் தொகுதியைச் சேர்ந்தவர்.

மதினாவின் நியமனம் குறித்து கேள்வி எழுந்ததற்கு இன்னொரு காரணம் 2015 ஆண்டில் அவரது கணவர் தாம் நஜிப்புக்காக சாகத் தயார் என்று செய்திருந்த பிரகடனமாகும்.

மதினாவின் அம்னோ உறுப்பியம் பற்றி கருத்துரைக்குமாறு மலேசியாகினி விடுத்திருந்த வேண்டுகோளுக்கு மதினாவோ ரிஸுவானோ இன்னும் எதிர்வினையாற்றவில்லை.