வட கொரிய அதிபர் கிம் ஜொங்-உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜொங்- நாமைக் கொன்றதாக இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் மீது இன்று சிப்பாங் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
வியட்நாமைச் சேர்ந்த டுவொன் தி ஹுயோங்,28, இந்தோனிசியாவைச் சேர்ந்த சித்தி ஆயிஷா, 25, ஆகிய இருவர் மீதும் குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ்க் குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்கள் குற்றவாளிகள் என நிறுவப்பட்டால் மரணதண்டனை விதிக்கப்படும்.
அக்கொலைக் குற்றத்தில் மேலும் நால்வர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் குற்றப்பத்திரிகை கூறியது.
இருவர்மீதும் தனித் தனியாகவே கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது ஆனால் இருவரையும் சேர்த்தே விசாரிப்பதற்கு மனுச் செய்து கொள்ளப்போவதாக அரசுத்தரப்பு வழக்குரைஞர் முகம்மட் இஸ்கண்டர் அஹ்மட் தெரிவித்தார்.
நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது பெண்கள் இருவரும் தோட்டா துளைக்க முடியாத ஆடை அணிந்திருந்தார்கள். வழக்குமன்றத்துக்குள் செல்லும்போது அவை அகற்றப்பட்டன.