14வது பொதுத் தேர்தலில் தொகுதி ஒதுக்கீடுகள் செய்வதற்குமுன் அதற்கான அடிப்படைக் கொள்கைகள் குறித்து விவாதிக்க பக்கத்தான் ஹராபான் பங்காளிக் கட்சிகளுடன் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா கேட்டுக்கொண்டிருக்கிறது.
நேற்று தொகுதி ஒதுக்கீடு மீது நடைபெற்ற ஹராபான் கட்சிகளின் கூட்டத்தில் பெர்சத்து கலந்துகொள்ளாதது குறித்து விளக்கிய பெர்சத்து துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதிர் இதைத் தெரிவித்தார்.
“எல்லாக் கட்சிகளையும் கொண்ட நுட்பக்குழு ஒன்று இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்குமுன்னர் ஹராபான், பிபிபிஎம்(பெர்சத்து) உயர் தலைவர்கள் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான அடிப்படைக் கொள்கைகளை வகுக்க வேண்டும் என விரும்புகிறது, அதற்குச் சிறிது அவகாசம் தேவை”, என முக்ரிஸ் ஓர் அறிக்கையில் கூறினார்.
பக்கத்தான் ஹராபான் அதற்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து வருவதாகவும் விரைவில் அது நடக்கும் என்றும் அவர் சொன்னார்.