போலீசார் பாதிரியார் ரேய்மண்ட் கோ கடத்தல்மீது நடைபெறும் விசாரணைகள் குறித்து அவரின் குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்தாமல் வைத்திருப்பது சரியல்ல என்கிறார் டிஏபி எம்பி ஒருவர்.
கோ காணாமல்போனதாக புகார் செய்யப்பட்டு 18 நாள்கள் ஆகின்றன. போலீசிடமிருந்து தகவல் வருமா என்று அவரின் குடும்பத்தாரும் நண்பர்களும் காத்திருக்கின்றனர், இதுவரை தகவல் ஏதுமில்லை என புக்கிட் மெர்தாஜாம் எம்பி ஸ்டீபன் சிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் கடத்தல் குறித்து விசாரிக்க சிறப்புப் பணிக்குழு அமைத்திருப்பதாக அறிவித்தார். அதன் விசாரணைகள் எந்த அளவில் உள்ளன என்று சிம் வினவினார்.
“இரண்டு வாரங்களாக செய்தி எதுவும் இல்லை என்பதால் கோ-வின் மகன் இரண்டு நாள்களுக்கு முன்னர் இரண்டாவது புகார் ஒன்றைச் செய்துள்ளார்.
“விசாரணையை இரகசியமாக வைத்திருக்க அவர்களுக்கு ஏதாவது காரணம் இருக்கலாம் எனினும், குடும்பத்தாரை இருட்டிலேயே வைத்திருக்காமல் என்ன நடக்கிறது என்பதையாவது அவர்களுக்குத் தெரியப்படுத்தலாம்”, என்று சிம் கூறினார்.
கோ-வின் கடத்தல் சாதாரணக் குற்றமாக இருக்க வாய்ப்பில்லை என்று அச்சம் தெரிவித்த சிம், அது பயங்கரவாதச் செயலாகக்கூட இருக்கலாம் என்றார்.