மலேசியாவில் சுயேட்சையான நீதித்துறை இல்லை என்கிறார் நவநீதம் பிள்ளை

 

NaviPillay1தென்ஆப்ரிக்காவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் ஒரு தெளிவான வேறுபாடு இருக்கிறது. மலேசியாவில் சுயேட்சையான நீதித்துறை இல்லை என்பதுதான் அந்த வேறுபாடு என்று நவி என்று அழைக்கப்படும் நவநீதம் பிள்ளை நேற்றிரவு பினாங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கில் கூறினார்.

தென்ஆப்ரிக்காவில் பிறந்து வளர்ந்தவரான நவி ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் கமிஷனராக 2008 லிருந்து 2014 வரையில் இருந்தவர். தென்ஆப்ரிக்காவின் உயர்நீதிமன்றத்தில் முதல் வெள்ளையர்-அல்லாத நீதிபதியாக பதவி வகித்தவர்.

மலேசிய நீதித்துறையின் அதிகார எல்லை நாடாளுமன்ற கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருக்கிறது. “நான் இது போன்ற ஒன்றை ஒரு மக்கள் ஆட்சியில் கேள்விப்பட்டதே இல்லை”, என்று அவர் மேலும் கூறினார்.

தென்ஆப்ரிக்க நீதிமன்றங்கள் அந்நாட்டு ஆட்சித்துறையை மேற்பார்வை செய்யுமாறு அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளன என்பதை நவி வலியுறுத்திக் கூறினார்.

அனைத்துலக கிரிமினல் நீதிமன்றத்திலிருந்து தென்ஆப்ரிக்கா விலகிக்கொள்கிறது என்ற தென்ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமாவின் நிருவாகத்தின் அறிவிப்பை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் அரசமைப்புச் சட்ட நீதிமன்றம் அதிபருக்கு உத்தரவிட்டிருந்ததை நவி சுட்டிக்காட்டினார்.

தென்ஆப்ரிக்க அரசமைப்புச் சட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு காரணம் ஆட்சித்துறை இந்த விவகாரத்தை முதலில் நாடாளுமன்றத்துடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்பதாகும் என்று நவி விளக்கம் அளித்தார்.

அதுதான் சுயேட்சையான நீதித்துறை இருப்பதின் சிறப்பு ஏனென்றால் அது நான் இன்று கேள்விப்படும் அனைத்து புகார்களுக்கும் நீதி வழங்கும் என்றாரவர்.