டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமர் பதவியிலிருந்து விலகி இரண்டு பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிறது, ஆனாலும் முன்னணி அரசியலிலிருந்து அவர் இன்னும் ஓய்வு பெறவில்லை.
அவருக்குப் பின் பிரதமராக அப்துல்லா அஹ்மட் படாவியை நியமித்தவரும் அவரே. படாவி பதவியிலிருந்து வெளியேறக் காரணமாக இருந்தவரும் அவரே. இப்போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எதிர்த்து போர்முரசு கொட்டிக் கொண்டிருக்கிறார்.
நஜிப்பைப் பதவி இறக்க அடுத்த கட்டத்துக்குச் சென்று பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவை உருவாக்கினார், முன்பு அவரது அரசியல் எதிரிகளாகத் திகழ்ந்தவர்களுடன் கைகோத்துக் கூட்டணியும் அமைத்துக் கொண்டிருக்கிறார்.
இப்போது அந்த 92-வயது முன்னாள் பிரதமர் எதிர்வரும் தேர்தலில் நேரடியாகக் களம் இறங்கப் போகிறார் என்று அரசல்புரசலாக செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது.
நேற்று ஒரு நிகழ்வில் பேசிய மகாதிர், தம்மை எதிர்த்து கெடா, லங்காவியில், போட்டிபோட துணிச்சல் உண்டா என்று சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீசுக்குச் சவால் விடுத்தார்.
“என்னை எதிர்த்து லங்காவில் போட்டிபோடும் துணிச்சல் உண்டா என்று அவரைக் கேட்கிறேன். அதாவது, அடுத்த பொதுத் தேர்தலில் நான் போட்டியிடும் பட்சத்தில்”, என்றவர் கூறினார்.
நஸ்ரி முன்பு மகாதிருக்கு தில்லிருந்தால் தம்முடைய நாடாளுமன்ற தொகுதியான பேராக், பாடாங் ரெங்காஸில் போட்டிபோட வரட்டும் என்று சவால் விடுத்திருந்தார். அதற்கு மகாதிரின் பதிலடி இது.
முன்னாள் பிரதமர் தேர்தலில் போட்டியிடப்போகிறார் என்ற ஊகத்துக்கு வலுச்சேர்க்கும் பதிவு ஒன்றும் முகநூலில் இடம்பெற்றுள்ளது. அது அவரின் மகன் முன்னாள் கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிருக்கு ஆதரவான முகநூல் பக்கத்தில் வெளிவந்திருந்தது.
நஸ்ரியின் சவாலை ஏற்றுக்கொண்டு மகாதிர் எதிர்சவால் விடுத்திருப்பது, “மகாதிர் நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட முடிவு செய்துள்ளார் என்பதற்கும் அவர் லங்காவியைத் தளமாகக் கொண்டு செயல்படப் போகிறார் என்பதற்கும் தெளிவான அடையாளமாகும்” என்று அப்பதிவு கூறிற்று.
தயவு செய்து எழுத்து பிழைகளை கவனிக்கவும்
செய்தி எழுத்தளர் எழுத்து பிழைகளை கவனிக்கவும் .