ஸாகிர் நாய்க் நாடு கடத்தப்பட வேண்டும், டெக் கீ கூறுகிறார்

 

Limittofreedomof speechTeckGheeசர்ச்சைக்குரிய சமயச் சொற்பொழிவாளர் ஸாகிர் நாய்க் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட வேண்டும், ஏனென்றால் பேச்சு சுதந்திரத்திற்கும் வரம்பு உண்டு என்று கொள்கை முன்னெடுப்புகள் மையத்தின் (CPC) இயக்குனர் லிம் டெல் கீ கூறுகிறார்.

“அனைத்து சமுதாயங்களிலும் பேச்சு சுதந்திரத்திற்கு வரம்புகள் உண்டு என்பதை ஒவ்வொருவரும் அறிவர்”, என்று மின்னஞ்சல் வழி மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள பதிலில் அவர் கூறுகிறார்.

“ஸாகிருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை அவர் தொடர்ந்து சமய தீவிரவாதத்தையும் சகிப்புத்தன்மையின்மையையும் பரப்புவதிலிருந்து தடுப்பதாகும்”, என்று லிம் விளக்கம் அளித்தார்.

கடந்த வாரம், லிம் இதர 18 பேருடன் சேர்ந்து இந்நாட்டில் தங்கியிருப்பதாக அவர்கள் நம்பும் ஸாகிரை கைது செய்து நாடு கடத்த அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தும் ஒரு சிவில் வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

காலம் கடந்து விடுவதற்குமுன் அதிகாரிகளும் நமது நாட்டு அரசியல் தலைவர்களும் பகைமையைப் பரப்பும் ஸாகிர் மற்றும் அவரைப் போன்றவர்களுக்கு எதிராக கதவைச் சாத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணருமான லிம் மேலும் கூறினார்.

தாங்கள் தொடர்ந்துள்ள வழக்கு தேசநிந்தனையானது என்று பெர்காசா இளைஞர் பிரிவு செய்துள்ள போலீஸ் புகார் பற்றி குறிப்பிட்ட லிம், “நாங்கள் தேசியப் பாதுகாப்பு, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை அழியாது காப்பாற்ற முயல்கிறோம்”, என்றார்.

இஸ்லாமியர் அல்லாத ஒரு சமயப் போதகர் நாடு முழுவதும் பயணித்து பொதுமேடையில் இஸ்லாத்திற்கு எதிராக வெறுப்பை உண்டாக்கும் மதவெறி கொண்ட பேச்சுகளை பேசினால் அவற்றை அமைதியாகக் கேட்டுக் கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பார்களா என்பதை பெர்காசா உறுப்பினர்கள் தங்களையே கேட்டுக்கொள்ள வேண்டும் என்றார் லிம்.

ஸாகிர் நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டலானவர் என்பதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் 59 பக்கம் அடங்கிய சத்தியப்பிரமாணப் பத்திரங்களில் சேர்க்கப்பட்டுள்ளன என்று லிம் மேலும் கூறினார்.