மலேசிய நிறுவன ஆணைய(எஸ்எஸ்எம்)த்தில் பதிவுபெற்று சிறு வணிகத்தில் ஈடுபடுவோர் பந்துவான் ரக்யாட் மலேசியா (பிரிம்) உதவித் தொகைக்குச் செய்து கொள்ளும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாகக் கூறப்படுவதை நிதி அமைச்சர் II ஜோஹாரி அப்துல் கனி மறுத்தார்.
“சிலர் அவர்களின் பிரிம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகக் குறைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவை நிராகரிக்கப்படவில்லை, அவர்களிடமிருந்து கூடுதல் விவரங்கள் தேவைப்படுகின்றன.
“அவர்களில் சிலர் எந்த நிறுவனத்திலும் வேலை செய்வதில்லை. சிறு தொழில் செய்கிறார்கள்”, என ஜோஹாரி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அவர்கள் பிரிம் உதவித் தொகை பெறத் தகுதி பெற்றவர்கள்தாமா என்பதைத் தெரிந்துகொள்ள அவர்ளின் வங்கிக் கணக்கு அறிக்கைகளைக் கொண்டுவருமாறு பிரிம் மனுக்களைக் கவனிக்கும் வருமான வரி வாரியம்(ஐஆர்பி) கேட்டுக்கொண்டிருக்கிறது என்று ஜொஹாரி கூறினார்.
பிரிம் உதவித் தொகை ரிம4,000 அல்லது ரிம3000த்துக்கும் குறைவான மாத வருமானத்தைக் கொண்டுள்ள குடும்பங்களுக்கும் ரிம2,000த்துக்கும் குறைவாக மாத வருமானம் கொண்ட தனிப்பட்டவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
“நீங்கள் எங்கும் வேலை செய்யாவிட்டால் சொந்தத் தொழில் செய்கிறீர்களா என்று கேட்போம். உங்கள் வருமானத்தைத் தெரிந்துகொள்ள ஐஆர்பி விரும்புகிறது”, என்றாரவர்.
விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டோர் ஐஆர்பி-இடம் முறையிடலாம் என்றும் அவர் சொன்னார்