வட கொரியாவிலிருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்ட மலேசியர்களை விடுவிக்க வேண்டியிருப்பதால் மலேசியா அந்நாட்டுடன் உறவுகளைத் துண்டித்துக் கொள்ளாது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.
“நாம் அவர்களுடன் நட்புகொண்டுள்ள ஒரு நாடு…….அந்த உறவை வைத்திருக்க வேண்டும், அதுதான் பேச்சு நடத்துவதற்கு வகை செய்யும்”, என நஜிப் நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே, துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, ஜொங்-நாம் கொலை விவகாரம் தொடர்பில் கோலாலும்பூருக்கு வருகை மேற்கொண்ட வட கொரிய தூதுக்குழுவுடன் பேச்சு நடத்தப்படும் என்றார்.
“அவர்களின் தூதுக்குழு இன்னும் இங்குதான் உள்ளது. விவகாரத்தை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள விஸ்மா புத்ரா அவர்களுடன் பேச்சு நடத்தும்.
“அவர்களுடன் அரச தந்திர உறவுகளை வைத்திருப்பது நமக்கு முக்கியம்”, என்று ஜாஹிட் கூறினார்.