தமிழ் உணர்வாளர் பொன்முகம் காலமானார்

 

LawyerPon2மஇகாவில் தொடங்கி ஜனநாயகச் செயல் கட்சி வரையில் சென்று பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்தில் தொகுதியில் போட்டியிட்டவரும், தமிழ்ப்பற்று மிகுந்தவருமான வழக்குரைஞர் பொன்முகம் நேற்று தனது 78 ஆவது வயதில் காலமானார்.

நேற்று காலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சிகிட்சையளித்துக் கொண்டிருக்கையில் பிற்பகல் மணி 1.10 க்கு அன்னாரின் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஜோகூர், குளுவாங், ரெங்கம் பகுதியில் பிறந்த சண்முகம் என்ற அவர் பிற்காலத்தில் தனது தந்தையின் பெயரான பொன்னன் என்பதை இணைத்து “பொன்முகம்” என்றானார்.

ரெங்கம் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கல்வி பயின்ற பொன்முகம் தமிழ்ப்பள்ளியில் இடைக்கால ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

பின்னர், கோலாலம்பூருக்கு குடி பெயர்ந்த அவர் அரசாங்க தகவல் இலாகவின் “உதயம்” மாத இதழின் ஆசிரியராக இருந்துள்ளார். தன்னூக்கமும் அயராத முயற்சியும் கொண்ட பொன்முகம் சட்டம் படித்து வழக்குரைஞரானார். சமூகம் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் நிறைய எழுதியுள்ளார்.

அன்னாருக்கு இறுதி மரியாதை நாளை வெள்ளிக்கிழமை நண்பகலில் 12எ, ஜாலான் செபூத்தே, பழைய கிள்ளான் சாலை, கோலாலம்பூர் என்னும் முகவரியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.

மேல்விபரத்திற்கு 012 – 9751302 (வேந்தன்) மற்றும் 019 – 6626536 (திருமதி கமலா பொன்முகம்) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அன்னாரின் குடும்பத்திற்கு செம்பருத்தி.கோம் அதன் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.